| குடியேற்றம் கி.மு. 6-4நூற்றாண்டுகளில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது திண்ணம். எனவே, அடுத்த மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளில் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கலாம். பார்ப்பனரின் கடமைகளைப்பற்றி அந்நூலில் விதி வகுக்கப்பட்டுள்ளது. பார்ப்பனரின் குடியேற்றம் விரிவாக நடைபெற்ற சில காலத்துக்குப் பிறகே அவர்களுக்கென விதிகள் வகுக்க வேண்டிய தேவை ஏற்படும். ஆகையால், தொல்காப்பியரைக் கி.மு. 6-4 நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் என்று கொள்ளுவதற்கில்லை. வடமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளுவது எவ்வாறு என்பதற்குத் தொல்காப்பியர் விதி ஒன்று வகுத்துள்ளார்.36 ஒரு நாட்டில் நுழைந்து இடம்பெறும் புதிய ஒரு மொழியானது அந்நாட்டில் ஏற்கெனவே வழக்கத்திலிருக்கும் ஒரு மொழியுடன் ஒருங்கிணைந்து கலந்து வழங்கத் தொடங்குவதற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளாவது செல்லவேண்டும். அத்தகைய நிலையிற்றான் அயல்மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாட்டு மொழிக்குச் சில நடைமுறை விதிகள் வகுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தொல்காப்பியம் கி.மு. 2 அல்லது 1ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கொள்ளுவது பொருத்தமாகும். தொல்காப்பியத்தின் காலத்தைக் கி.மு. 1000 முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரையில் ஆய்வாளர்கள் அறுதியிடுகின்றனர். அது கடைச் சங்கத்துக்கு முற்பட்டதெனச் சிலரும், பிற்பட்டதெனச் சிலரும் கூறுவர். எவ்வாறாயினும், தொல்காப்பியம் கடைச்சங்கத்துக்குச் சற்று முற்பட்டது என்று கொள்ளுவதற்குத் திட்டமான சான்றுகள் உள்ளன. அடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பை ஆய்வோம். இதில் அடங்கியுள்ள நூல்களாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறு பஞ்ச மூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை ஆகியவை. முன்பு ஒரு காலத்தில் பண்டைத் தமிழ் நூல்கள் மேற்கணக்கு எனவும், கீழ்க்கணக்கு எனவும் இருவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்று பன்னிருபாட்டியல் மூலம் அறிகின்றோம். 36. தொல். சொல். எச்சவியல் 5 |