பக்கம் எண் :

சங்க இலக்கியம் 121

அவற்றுள் ஒன்றாகும். தமிழகத்தில் முழு வளர்ச்சி பெற்றிராத ஒரு
கலையைப்பற்றிக் கூறும்போது இளங்கோவடிகள் அதைப் பற்றிய வடமொழி
நூல் விளக்கங்களை எடுத்துக் காட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டிராது.
ஏற்கெனவே முழு வளர்ச்சி பெற்றிருந்த கூத்து இசையாகிய கலைகளைப்
பற்றிய விரிவுகளை அவர் எடுத்துக் கூறியிருப்பதில் வியப்பேதுமில்லை.
சிலப்பதிகாரத்தில் சிறந்து வளர்ந்த இரு பெரும் மொழிகளிடையே கருத்துப்
பரிமாற்றங்கள் நடைபெறவில்லை என்று கூறமுடியாது. தமிழர்கள்
வளர்த்திருந்த நாட்டியக் கலையினின்றும் பல புதுமைகள் வடமொழியில்
ஏற்புண்டு. புதிய வடிவத்தில் புதிய பெயர்களைப் புனைந்து
வெளிவந்திருக்கக்கூடும்.பரத நாட்டியம் என்னும் பழந்தமிழரின் கூத்து
முறைகள் பல நூற்றாண்டுகளாகத் தம் தூய்மையையும், இனிமையையும்,
பெருமையையும் விரிவையும் இழக்காமல் இன்றும் தமிழகத்தில் பயின்று
வருகின்றன. வடஇந்தியாவில் பரதநாட்டியம் அறவே மறைந்து ஒழிந்து
போயிற்று. அங்கு மூலைக்கு மூலை பலப் பலவான நாட்டிய வகைகள்
தோன்றி வளர்ந்து வந்துள்ளன. அவற்றுள் ஒன்றிலேனும் பரத நாட்டிய
முறையின் சிறப்புகளைக் காணவியலாது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக்
காதையில் இளங்கோவடிகள் எடுத்து விளக்கும் பண்முறைகள் தேவாரப்
பண்களைவிட, குடுமியாமலைக் கல்வெட்டுப் பண்களைவிட மிகவும்
பழமையானவை.

     கோவலனும் கண்ணகியும் முதன்முதல் பூம்புகாரைவிட்டு மதுரைக்குப்
புறப்பட்ட நாளன்றும், இறுதியில் கண்ணகி மதுரைக்கு எரியூட்டிய நாளன்றும்
காணப்பட்ட கோள்நிலை முதலியவற்றின் அடிப்படையில், வானவியல்
கணிப்பின்படி காலத்தை அறுதியிட்டுச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்று எல். டி.
சுவாமிக்கண்ணுபிள்ளை அவர்கள் எண்ணுகின்றார். ஆனால், வானவியலின்படி
காலங்கணிப்பதற்குப் போதுமான கோள்நிலைக் குறிப்புகளைச்
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தரவில்லை. வானவியலின்
அடிப்படையிலேயே வேறொரு ஆய்வாளரும் (எம்.இராமராவ்) இக்
காப்பியங்கள் கி.பி. 146-க்கும் கி.பி. 587-க்கும் இடையில் ஆக்கப்பட்டிருக்க
வேண்டும் என்றும் கூறுகின்றார். இளங்கோவடிகளோ உரையாசிரியரோ
கோள்நிலையை அறுதியிட்டுத் தெரிவிக்கவில்லை. சிலப்பதிகாரத்தில்
கிடைக்கும் சில குறிப்புகளைமட்டும் கொண்டு காலங்கணித்தல் திருத்தமாக
இராது. எனவே, இவ்விரு அறிஞரின் காலக் கணிப்புகள் பொருந்தாதவை
எனப் புறக்கணிக்கப்பட வேண்டியவையாம்.