| பரப்பும் சமய நோக்குடனே இயற்றப்பட்டதெனத் தோன்றுகின்றது. சமணரின் செல்வாக்கு ஓங்கி நின்ற காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டாகும். வச்சிரநந்தி என்ற சமணர் கி.பி. 470-ல் திராமிள சங்கம் என்று ஒரு தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில இச்சங்கத்தை மருவிய நூல்களாம் எனவும் சிலர் எண்ணுகின்றனர். காஞ்சிபுரத்தில் கி.பி. 4, 5, 6ஆம் நூற்றாண்டுகளில் பௌத்தரின் செல்வாக்குப் பெரிதும் பரவியிருந்தது. சமணம், பௌத்தம் ஆகிய இவ்விரு சமயங்களேயன்றிச் சைவமும் அதன் உட்பிரிவுகளும், வைணவமும், உலோகாயதமும், பூதவாதமும் செழிப்புடன் காணப்பட்டன. சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் எடுத்த காதையிலும், வேட்டுவவரியிலும் ஆய்ச்சியர் குரவையிலும் சமய வளர்ச்சியையும், மக்களுக்குச் சமயங்களில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் அறிகின்றோம். எல்லாச் சமயத்தினரும் பூசல்கள் இன்றி ஒருமித்து வாழ்ந்து வந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் ஒருவர் வேத நெறியையும் மற்றொருவர் சமணத்தையும், பிறிதொருவர் பௌத்தத்தையும் சார்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் கையாண்டுள்ளார். அவர் தமக்கு வேண்டிய இசை, கூத்து நுணுக்கங்களைப் பரத நாட்டிய சாத்திரம் என்னும் வடமொழி நூலினின்றும் கற்றார் என்றும், அதனால் சிலப்பதிகாரம் காலத்தால் மிகவும் பிற்பட்டநூல் எனவும் கொள்ளுவர் வையாபுரி பிள்ளையவர்கள். இளங்கோவடிகள் பரத நாட்டிய சாத்திரத்தைப் பயின்றிருக்கக்கூடும். ஏனெனில், அவ் வடமொழி நூலினுள் கூறப்படும் சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்னும் நான்கு வகையான ‘விருத்தி’ என்னும் நாடக உறுப்பினைப்பற்றி அவர் விளக்குகின்றார்.60 பரத நாட்டிய சாத்திரம் தோன்றிய காலமே இன்னும் வரையறுக்கப்படவில்லை. சிலர் அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதென்றும், சிலர் அது கி.பி. 4ஆம் நூற்றாண்டின் படைப்பு என்றும் கருத்து வேறுபடுவர். தமிழகத்தில் சங்க காலத்திலேயே பாட்டும், கூத்தும் மக்கள் பயின்று வந்த சிறந்த கலைகளாக விளங்கின. பாணரும் விறலியரும் இக்கலைகளை நாடெங்கும் பரவுமாறு செய்து வந்தனர். மன்னர்கள் அவர்களுடைய கலையறிவைப் பாராட்டிப் பரிசில்களை வாரி வழங்கினர். சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் மக்கள் சமூகம் பல துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆடல்பாடல் துறையும் 60. சிலப். 3 : 13இல் அடியார்க்கு நல்லார் விளக்கவுரை காண்க. |