பக்கம் எண் :

சங்க இலக்கியம் 119

வாழ்க்கையை நடத்தி வந்த சங்ககாலத் தமிழ்ச் சமூகம் நெடுந்தொலைவு
கடந்து வந்து இக் காப்பிய காலங்களில் பலவகையான வளர்ச்சிகட்கும்,
வேறுபாடுகட்கும், சிக்கல்கட்கும் உட்பட்டுக் காணப்படுகின்றது. பல பண்டைய
தமிழ்ப் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் மாறிப்போய்விட்டன.
‘யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம் முறைக்கேளிர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயர்நீர் போல, அன்புடைய
நெஞ்சம் தாம்கலந் தனவே’57 என்று காதலன் தன் காதலியைப் பாராட்டி
மணம் புரிந்து கொண்ட காலம் நழுவி, கோவலன் கண்ணகி இவ்விருவரின்
பெற்றோரும் மணவணி காண மகிழ்ந்து, மாமுது பார்ப்பான் மறைவழி
காட்டிடத் தீவலம் செய்து அவ்விருவருக்கும் மணம் புரிவித்த ஒரு காலம்
வளர்ந்து வந்துவிட்டது. ஆரியப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் பல
தமிழரின் வாழ்க்கையில் குடிபுகுந்துவிட்டன. சேயோன், மாயோன், வேந்தன்,
வருணன், கொற்றவை என்ற சங்க காலத்தெய்வங்களுடன் இக்
காப்பியங்களின் காலத்தில் வேற்படை, வச்சிரப்படை, ஐராவதம், பலதேவன்,
சாதவாகனன், அருகன், சந்திரன், சூரியன் ஆகிய கடவுளரின் வழிபாடும்
சிறப்பாக நடைபெற்று வந்தது.58 ஐந்தெழுத்தும் எட்டெழுத்தும்
ஓதப்படவாயின ;59 ‘தொண்ணூற்றாறுவகைச் சமய சாத்திரத் தருக்கக்
கோவை’யில் வல்லவரான பாசண்டர்களைச் சிலப்பதிகாரத்தில்
காண்கின்றோம். இவர்கள் சங்க காலத்தில் காணப்பட்டிலர். ‘சுடலை
நோன்பிகள்’ என்றும், ‘உலையா உள்ளமொடு உயிர்க்கடனிறுத்தோர்’ என்றும்
காபாலிகர் மணிமேகலையிற் பாராட்டப் பெறுகின்றனர். இவர்களைப்பற்றியும்
சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை.

     சமணமும் பௌத்தமும் ஒன்றோடொன்று ஒத்து வளர்ந்து எங்கும் பரவி
இருந்த ஒரு காலத்தில் இவ்விரு காப்பியங்களும் இயற்றப்பட்டிருக்க
வேண்டும். ஆகையால், அவற்றுள் சமண பௌத்த சமயத் தத்துவங்கள்
விளைக்கப்பெறுகின்றன. இவ்விரு சமயங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே
தமிழகத்தில் நுழைந்து விட்டனவாயினும் சங்க இலக்கியங்களில் அவற்றைப்
பற்றிய குறிப்புகள் மிகவும் குறைவு. சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான
இளங்கோவடிகளை ஒரு சமணத் துறவி என்பர். மணிமேகலையானது
பௌத்தக் கொள்கைகளைத் தமிழகத்தில்

     57. குறுந். 40
     58. சிலப். 9 : 9-15
     59. சிலப். 11 : 128.