| அவர்கள் காலமாகிய கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மிகவும் செழிப்புற்று விளங்கியிருக்கவேண்டுமென்பதில் ஐயமில்லை. மேலும் மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய இவ்விரு காப்பியங்களும் சில அரசியல் அமைப்புகளைப்பற்றிக் கூறுகின்றன. அவற்றைக்கொண்டு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றுக்குப் பிற்பட்ட ஒரு காலத்தில் இக் காப்பியங்கள் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ளவேண்டும். எண்பேராயம், ஐம்பெருங்குழு என்ற அரசவைகளைப்பற்றிய செய்திகளை முதன்முதல் இக் காப்பியங்களிற்றான் நாம் கேள்வியுறுகின்றோம். இவை மன்னருக்கு மந்தணம் கூறும் அவைகளா, அன்றி அவர்களுடைய திருவுலாக்களை அணி செய்யும் குழுக்களா, எஃது என்று திட்டமாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்கள் இவ்வாயத்தைப்பற்றியும், குழுவையும் பேசுவதில்லை. சங்க காலத்துக்குப் பிறகு மன்னரின் கோன்மை உயர்ந்து கொண்டு போகவே மக்கள் நலனின் பாதுகாப்புக்காக இவ்வவைகள் நிறுவப்பட்டன என்று எண்ண வேண்டியுள்ளது. மற்றும் இக் காப்பியங்களின் காலத்தில் நல்ல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கொடும்பாளூர் சென்ற சாலையும், பின்னைய ஊரிலிருந்து மதுரைக்குச் சென்ற சாலையும் நன்றாகச் செப்பனிடப்பட்டிருந்தன. ஏரி, காடு, மலைச்சாரல், நெல்வயல், கருப்பந்தோட்டம், வெள்ளைப் பூண்டும் மஞ்சளும் விளைந்த தோட்டக்கால்கள், தெங்கு, மா, பலா முதலிய மரங்கள் செறிந்த குளிர்ந்த தோப்புகள் ஆகியவற்றினூடே அந் நெடுஞ்சாலைகள் அமைந்திருந்தன. சங்க காலத்தில் இத்தகைய திட்டமிட்டுச் செப்பனிடப்பட்ட நெடுஞ்சாலைகள் அமைந்திருந்தனவெனத் தெரியவில்லை. சங்க இலக்கியங்கள் காதல், கற்பு, போர் ஆகிய அகத்திணை, புறத்திணைப் பொருள்கள்பற்றியே பேசுகின்றன. ஆனால், இவ்விரு காப்பியங்களிலோ வளர்ந்து வந்த வாழ்க்கைக் கூறுபாடுகள் பலவற்றைக் காண்கின்றோம். நகர வாழ்க்கை, கலைப்பயிற்சி, சமயத்தத்துவச் சொற்போர்கள், ஊழ் வந்து உறுத்தல், பொய் புரட்டுகள் ஆகியவற்றைப் போன்ற புதுமைகள் பல இக் காவியங்களில் இடம் பெற்றுள்ளன. உண்டு, உடுத்து, குடித்து, காதல் புரிந்து, இல்லறம் ஓம்பி, புலவர்களைப் புரந்து, பாணர், விறலியர் கூத்தைக் கண்டும் இசையைக் கேட்டும் மகிழ்ந்து, மன்னனுக்காகப் போர் புரிந்து எளிய |