| விறலியர் அனைவருமே மதுவுண்டு களித்தனர். இயற்கையாகக் கிடைத்த பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், அரிசி, புளித்த சோற்றுக்காடி முதலியவற்றைக் காய்ச்சி இறக்கிய மதுவையும், யவனர்கள் கப்பலில் கொண்டுவந்த தேறலையும் அவர்கள் விருப்பத்துடன் குடித்தனர்.66 தேறலின் சுவையையும், அது கொடுக்கும் வெறியையும் தூண்டுவதற்காக மது வகைகளைக் கண்ணாடிக் குப்பிகளிலும், மூங்கிற் குழாய்களிலும் நிரப்பி, நெடுநாள் மண்ணில் புதைத்து வைப்பர்.67 அத்தகைய மது வகைகளின் வெறி மிகவும் கடுமையாக இருக்கும். அக் கடுமையைப் பாம்பின் கடிக்கும், தேள் கொட்டுக்கும்68 புலவர்கள் ஒப்பிட்டுள்ளனர். கள்ளுக்கு இன்சுவையும் நறுமணமும் ஊட்டுவதுண்டு.69 கள்ளுண்டவர்கள் புளிச் சுவையை விரும்பிக் களாப்பழம், துடரிப்பழம் (ஒருவகை இலந்தைக் கனி - (Zizy Phus Rugosa), நாவற்பழம் முதலிய பழங்களைப் பறித்துத் தின்பர்.70 கள்ளைப் பனைமரத்துப் பன்னாடையால் வடிகட்டுவர்.71 யவனர் இரட்டைப்பிடிச் சாடிகளில் மரக்கலவழிக் கொணர்ந்த மதுவைத் தமிழர் உண்டுவந்ததற்கான சான்றுகள் அரிக்கமேட்டுப் புதைகுழிகளில் கிடைத்துள்ளன. சங்ககாலத்தின் இறுதியில் தமிழ் மக்களிடையே குடிப்பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற பெரிய நகரங்களில் வாழ்ந்திருந்த குடிமக்கள் இத் தீய பழக்கத்தில் மூழ்கிக் கிடந்தனர். வரையற்ற சிற்றின்பமும், கட்குடியும் ஒரு நாட்டின் மக்களை இழிந்த நிலைக்கு ஈர்த்துவிடும் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். தமிழரிடையே தம் காலத்திலேயே இத் தீய பழக்கம் வேரூன்றி வளர்ந்து விட்டதைக் கண்டு திருவள்ளுவர் பெரிதும் கவன்றார் போலும். குடிப்பழக்கத்தை வன்மையாகக் கடிந்து இயற்றிய குறட்பாக்களைத் திருக்குறளில் காணலாம். அவர் கள்ளை நஞ்சு என்றே கூறுகின்றார். ஒழுக்கத்துக்கு முரணான சிற்றின்ப விழைவும், கட்குடியும் எத்துணைத் தீய பழக்கங்கள் என்பதைக் காட்டவும், இவ் விரண்டும் தம் காலத்துத் தமிழ் மக்களைப் பெரிதும் ஈர்த்துவிட்டதைக் கடியவுமே வள்ளுவர் ‘வரைவின் மகளிர்’, ‘கள்ளுண்ணாமை’ என்னும் ஈரதிகாரங்களைத் திருக்குறளில் அடுத்தடுத்து வைத்திருக்கின்றார். உடை பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் பூவையும், தழையையும் கோத்து ஆடையாக 66. புறம். 56 : 18; மலைபடு. 522. 67. புறம். 392: 16.; அகம். 348. 68. சிறுபாண். 237. 69. பொருநர். 157. 70. புறம். 170. 71. அகம். 216. |