| பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். இவை யாவும் ஊர்க் கூட்டத்தின் பெயர்களெனவே கருதலாம். திருமுருகாற்றுப்படையில் மட்டிலும், மன்றமும் அம்பலமும் வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளன. அதன் உரையாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார் : மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடிய இடம் எனவும், அம்பலம், பொதியில் என்னும் இரண்டும் ஒரு சிறு மாளிகையைக் குறிப்பிட்டனவென்றும் அதன் நடுவில் ஒரு பீடம் இருந்ததாகவும் கருதுகின்றார். இதை ஒட்டிப் பலர் பல ஊகங்களை வெளியிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார், மன்றம் என்றது ஒரு மாளிகை என்றும், பொதியில் என்றது ஒரு பொது இடம் என்றும் கருதுகிறார். பொதியில் என்றது பொது இல் என்னும் சொற்களின் இணைப்பில் ஏற்பட்டதெனலாம் ; அதாவது பொதுவான இருப்பிடம் என்பது பொருள். பொதியில் சாணத்தால் மெழுகப்பட்டிருந்ததெனப் பட்டினப்பாலை 246-49 ஆம் அடிகளிலிருந்து அறிகிறோம். சில ஊர்களில் பெரிய மரத்தடியில் மன்றம் அல்லது பொதியில் கூடியது. குறிப்பாக, வேப்ப மரத்தடியில் இவை அமைந்திருந்தனவெனப் புறநானூற்றுச் செய்யுள்களிலிருந்து அறிகிறோம்.222 மன்றம் அல்லது பொதியில் என்ற கூட்டங்களின் சிறந்த பணி மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்ப்பதாகவே இருந்தன. அக் கூட்டங்களின் முதியோர் இவ் வழக்குகளைத் தீர்த்துவைத்தனர். இத் தலைவர்கள் ஊர்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரெனக் கூற முடியாது. வயதிலும் அறிவிலும் முதியோராயிருந்தவர் தாமாகவே தலைவராக அமர்ந்திருந்தன ரெனவே கருத வேண்டும். வழக்குகளை ஒழுங்கு படுத்துவதைத் தவிர ஊர்ப் பொதுக்காரியங்களையும் சமூகநலத் திட்டங்களையும் மன்றத்தார் பொறுப்பேற்று நடத்தி வந்தனரெனவும் கூறலாம். அரசு, ஊர்களின் அன்றாடச் செயல்களிலும் பொறுப்புகளிலும் தலையிட்ட தென்பதற்குச் சான்றுகள் இல்லை. ஊரின் சில பகுதிகள் சேரிகள் என்று அழைக்கப்பட்டிருந்தன. சேரிகளில் சில வகுப்பினர் குடியிருந்துவந்தனர். தாழ்ந்த வகுப்பினர் வாழ்ந்த இடங்களுக்குத்தாம் அப் பெயர் வழங்கப்பட்டிருந்ததெனக் கூறமுடியாது ; பறைச்சேரி என்பதுபோல் பார்ப்பனச்சேரி, இடைச்சேரி என்றெல்லாம் பெயர்கள் 222. புறம். 76, 79, 371. |