| இருந்தன. சாதிப் பிரிவுகள் ஊர் அமைப்பில் அக்காலத்திலேயே இடம் பெற்றுவிட்டதெனத் தோன்றுகின்றது. நகராட்சி சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்கள் இருந்தன. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் என இருந்தமைபோல், நகரங்களில் பட்டினம், பாக்கம் எனச் சில இருந்தன. பட்டினம் என்றது கடலோரமாயிருந்த நகரைக் குறித்தது. பாக்கம் பட்டினத்தின் ஒரு பகுதியெனலாம். சங்ககாலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நகரங்களுள் சிறந்தவை புகார் (காவிரிப்பூம்பட்டினம்), கொற்கை, மதுரை, வஞ்சி அல்லது கரூர், முசிறி, காஞ்சி முதலியவை. இவற்றைப் பற்றி இலக்கியங்களில் கிடைத்துள்ள விவரங்கள் முழுவதையும் நம்புவதற்கில்லை. கவிஞர்களின் கற்பனைகளும் சொல்வன்மைகளும் விவரணங்களில் இடம் பெற்றுள்ளன. ஆயினும், பொதுவாக நகரங்கள் வணிகத்தினாலும் தொழில் சிறப்பினாலும் வளமுற்றிருந்தன. குறிப்பாக, மதுரையும் காவிரிபூம்பட்டினமும் சிறப்புற்று வளர்ந்திருந்தன. தமிழக நகரங்களில் மக்களின் சுயாட்சி நிலவிய தென்பதற்குச் சான்றுகளில்லை. ஆட்சிமுறையும் வடஇந்தியாவில் பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்ததுபோல் இங்கு நன்கு அமைக்கப்பட்டிருந்த தென்பதற்கு அறிகுறியில்லை. ஆயினும் மதுரை, வஞ்சி போன்ற தலைநகரங்கள் சீராக ஆளப்பட்டு வந்தனவெனக் கூறலாம். மதுரை மாநகரின் தெருக்கள் அன்றாடம் காலையில் பெருக்கப்பட்டுச் சுத்தமாயிருந்தனவென்று தெரிகிறது. இராப்பொழுதில் நகரங்கள் அக்கறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன; ஊர்காவலர் என்று அழைக்கப்பட்ட காவலாளர்கள் அமர்த்தப் பெற்றிருந்தனர். பாதுகாப்புக்காகக் காவல் நாய்களும் பயன்படுத்தப் பட்டிருந்தன. மன்னர்களது அரண்மனைகள் ஆழ்ந்த அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டமை விந்தையன்று. பொதுவாக சங்க காலத்தில் சிற்றூர்களும், பேரூர்களும், நகரங்களும் அவற்றிற்குத் தகுந்தவாறு ஆளப்பட்டு வந்தன வெனக் கூறலாம். அவை மிகச் சிறந்த முறையில் நடைபெற்று வந்தனவென்றோ பிற்காலங்களில் திகழ்ந்த முறைக்கு ஒப்பாக இருந்தனவென்றோ கருத இடமில்லை. |