பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 181

பகைவரின் படைகளுக்கு அப்பாலிருந்து நெற்கதிர்களைக் கொண்டுவரும்படி
ஏவினார். அவை கொணர்ந்த நெல்மணிகளைக் கொண்டு பாரியின் உணவுக்
குறையைத் தீர்த்து வைத்தார். ஆனால், எத்தனை நாள் இந்நிலை நீடிக்கும்?
இறுதியில் பாரி வள்ளல் தோற்றுவிட்டான் ; போரில் மாண்புடன்
மரணமடைந்தான். அவனுடைய இரு பெண்மக்களையும் தம்முடன்
அழைத்துக்கொண்டு சென்று பல மன்னர்களை யண்டி அவர்களை
மணந்துகொள்ளும்படி கபிலர் வேண்டிக்கொண்டார். பாரியின் புகழில்
அழுக்காறுற்றிருந்த அம் மன்னர்கள் மறுக்கவே அப் பெண்களைச் சில
பார்ப்பனப் பெரியாரிடம் ஒப்படைத்து விட்டு வாழ்க்கையில் சலிப்புற்று அவர்
வடக்கிருந்தார். இச் செய்தி புறப்பாட்டு ஒன்றின் அடிக்குறிப்பு ஒன்றினால்
தெரிய வருகின்றது.268 ஆனால், அவர் அவ்வாறு தம் வாழ்க்கையை
மடித்துக் கொண்டதாக அகச்சான்று ஏதும் கிடைத்திலது. இப் பெரும் புலவரே
சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனை அடுத்துப் பதிற்றுப்பத்துப்
பாடல்களுள் ஒரு பத்தை அவன்மேல் பாடி நூறாயிரம் பொன்னையும், ஒரு
மலைமீதேறி நின்று கண்ணுக்கெட்டியவரை தோற்றிய நாட்டையும் பரிசிலாகப்
பெற்றார். கபிலரைப் ‘புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்’ என்று
மாறோக்கத்து நப்பசலையார் புகழ்ந்துள்ளார்.269 பிற்காலத்தில் அகவற்பா
ஒன்று பாடிய கபிலர் வேறு, இவர் வேறு ஆவார்.

     குறுநில மன்னர்கள் இன்னும் வேறு பலர் வாழ்ந்திருந்து சிறப்புற்றுப்
புலவர்களால் பாடப்பெறும் பேற்றையடைந்துள்ளார்கள்.

இலங்கை

     தமிழகத்து வரலாற்றுடன் இலங்கையின் வரலாறும் இணைந்து
வந்துள்ளது. இலங்கையின் வரலாற்றைத் தெரிவிக்கும் நூல்கள் யாவும்
தமிழகத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளன. அத் தீவில் கி. மு.
188-77 ஆம் ஆண்டுகளில் இரு தமிழர்கள் நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி
அரசாண்டு வந்தனர். அவர்களுடைய ஆட்சி முடிவுற்ற பிறகு மீண்டும்
சிங்கள மன்னன் ஒருவன் அரசுரிமை ஏற்றான். இவனும் எளாரா என்ற
தமிழன் ஒருவனிடம் தோற்றுத் தன் ஆட்சியைப் பறிகொடுத்தான். எளாரா
என்பவன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் (கி. மு. 145-101) இலங்கையை
ஆண்டு வந்தான்.

     268. புறம். 236.
     269. புறம். 126.