பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 183

அல்லலுற்றது. அவர்கள் தமிழரல்லர் ; பிறமொழியாளர். அவர்கள் மாபெரும்
சூறாவளியைப்போல நாட்டில் நுழைந்து மக்களைக் கொன்று குவித்து
உடைமைகளைச் சூறையாடினர். சோழரையும் பாண்டியரையும் வெருட்டி ஓட்டி
அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்டு வந்தனர்.
அயல்நாட்டினர் வேறு ஒரு நாட்டை வென்று கைக்கொண்ட பிறகு
அவர்களுடைய மொழி, இலக்கியம், கலை, நாகரிகம் ஆகியவற்றை
அழிப்பதையே தம் முதற் கடமையாகக் கொள்ளுவர். இது வரலாறு கண்ட
உண்மையாகும். பேராசிரியர் பி.ஜி.எல். ஸ்வாமி களப்பிரர், கங்கர்களே
என்றும், ஒருசில ஆண்டுகளே தமிழகத்தில் இருந்தனரென்றும் கூறுவது
ஒப்புக் கொள்ளக் கூடியதன்று. ஆரியரால் விளைவிக்கப்பட்ட பண்பாட்டுப்
புரட்சியினாலும், களப்பிரரால் நேர்ந்த அரசியல் புரட்சியினாலும் தமிழர்
வாழ்வு சீர்குலைந்தது ; அவர்களுடைய மொழிக்கும், நூல்களுக்கும்,
கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் தீரா இன்னல்களும் இடையூறுகளும்
நேர்ந்தன. தமிழை வளர்த்துவந்த சங்கமும் தமிழ்க் கலையும் அழிவதற்கு
நெருக்கடி ஒன்று தோன்றிற்று.

     தமிழகத்தில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓரிருள்
பரவத் தொடங்கிற்று. தழிக வரலாற்று அரங்கில் ஒரு காட்சி முடிவுற்றுத்
திரையும் விழுகின்றது. மீண்டும் அத்திரையானது மேலே சுருண்டெழுவதற்குள்
முந்நூறு ஆண்டுகள் உருண்டோடிவிடுகின்றன.