பக்கம் எண் :

184

                      9. களப்பிரர்கள்

     களப்பிரர் யார், எங்கிருந்து வந்தவர்கள், எப்போது தமிழகத்தில்
நுழைந்தார்கள் என்னும் ஆய்வு இன்னும் முடிந்தபாடில்லை. களப்பிரரைக்
களவர் என்றும், கள்வர் என்றும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தமிழகத்தின் வடவெல்லையான வேங்கடத்துக்கும் மேற்பாலில்
வாழ்ந்திருந்தவர்கள் அவர்கள் என ஆய்வாளர் ஊகிக்கின்றனர். களப்பிரர்கள்
ஆந்திரர்களால் நெருக்குண்டு தெற்கு நோக்கிக் குடி பெயர்ந்தார்கள்.
தமிழகம் முழுவதிலும் இவர்கள் பரவினார்கள். தொண்டை மண்டலம், சோழ
மண்டலம், பாண்டி மண்டலம் ஆகியவற்றுள் ஒன்றேனும் இவர்களுடைய
கொடுமையினின்றும் தப்பவில்லை. தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட
குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள்;
கலியரசர்கள். இவர்களைப் பற்றிய சில விளக்கங்கள் வேள்விக்குடிச்
செப்பேடுகளிலும் பல்லவர்கள், சளுக்கர்கள் ஆகியவர்களுடைய
செப்பேடுகளிலும் கிடைத்துள்ளன. கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன்
ஒருவனாலும்,1 சிம்ம விஷ்ணு,2 முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ
மன்னர்களாலும், முதலாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன்
என்ற சளுக்க மன்னார்களாலும் களப்பிரர்கள் அழிவுற்றனர் என
அறிகின்றோம். இவர்கள் கொடும்பாளூர் முத்தரையருடன் (கி.பி. 8-11ஆம்
நூற்றாண்டு) தொடர்பு கொண்டவர்கள் எனச் சிலர் கருதுவர்.3 மதுரையைச்
சிறிது காலம் ஆண்டுவந்த கருநாடரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து
நிலவுகின்றது. தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும்
குறிப்பிடப்படுபவர்களும், வேளாள குலத்தைச் சார்ந்தவர்களுமான களப்பாளர்
என்பார் களப்பிரர் என்ற பெயரில் விளங்குகின்றனர் என்று சிலர்
ஊகிக்கின்றனர். இவ்வூகம் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

     களவர் இனத்தைச் சேர்ந்தவனான புல்லி என்ற மன்னன் ஒருவன்
வேங்கடத்தை ஆண்டுவந்தான்.4 தமிழகத்திற்கு

     1. வேள்வி. செப். Ep. Ind. XVII-p. 306.
     2. காசக். செப். S.I.I.
     3. Ep. Ind. XV-49.
     4. அகம். 83.