பக்கம் எண் :

களப்பிரர்கள் 185

வடக்கே ஆட்சிபுரிந்த சாதவாகனரின் வீழ்ச்சியாலும், பல்லவர்களின் கை
ஓங்கி வந்ததாலும், சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் கி.பி. 3, 4ஆம்
நூற்றாண்டுகளில் தொண்டை மண்டலத்தில் மிகப் பெரியதோர் அரசியற்
குழப்பம் ஏற்பட்டது. அப்போது வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த
களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து
பல்லவரையும், சோழரையும், பாண்டியரையும் ஒடுக்கித் தமிழகத்தில் கலகமும்
கொள்ளையும் கொலையும் விளைவித்தனர். சோழநாட்டைக் கைப்பற்றி
ஆண்டு வந்தவன் களப்பிர மன்னனான அச்சுதவிக்கிராந்தன் என்பவன்.
தொண்டை நாட்டில் களந்தை என்னும் இடத்தில் கூற்றுவன் என்றொரு
மன்னன் ஆண்டு வந்தனன் எனவும், அவனே கூற்றுவ நாயனாராகத்
திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றனன் எனவும் பெரிய புராணம்
கூறும்.5 இவன் களப்பிர குலத்தைச் சார்ந்தவன் என்று சிலர்
கொள்ளுகின்றனர். கருநாடக தேசத்துக் கல்வெட்டுகளில் கலிகுலன்,
கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக்
கலிதேவன் ஒருவனைப்பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் பேசுகின்றன.6
களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர்
இராச்சியத்தின் பேலூர்க் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.7 களப்பிரர்
என்போர் கன்னட நாட்டுடன் தொடர்பு கொண்டவர்களா என்று ஐயுறவும்
இடமுண்டு.

     களப்பிரர் முதலில் பௌத்தராகவும் பிறகு சமணராகவும் சமயச்
சார்புற்றிருந்தனர். களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் என்றொரு
மன்னன் சோழ நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தான் என
அறிகின்றோம். இவன் காலத்தில் புத்ததத்தர் என்ற பௌத்த அறிஞர் ‘விநய
விநிச்சயம்’ என்னும் நூலைத் தாம் எழுதியதாகக் கூறுகின்றார். பிற்காலத்தில்
களப்பிரர்கள் சமண சமயத்தைத் தழுவி அதன் வளர்ச்சிக்குத் துணை
புரியலானார்கள். களப்பிரர் காலத்தில் ஆக்கத் துறைகள் பலவற்றில் வளர்ச்சி
காணப்பட்டது. பௌத்த சமண ஒழுக்கங்கட்குச் செல்வாக்கு உயர்ந்தது.
பௌத்தரும் சமணரும் வைதிகச் சடங்குகளையும், வேள்விகளையும், ஆரிய
சமய தத்துவங்களையும் மறுத்தவர்கள். கொல்லாமை, புலால் உண்ணாமை,
பொய்யாமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு காணாமை என்னும் உயர்ந்த
அறங்களை ஒம்பி வளர்த்தவர்கள். ஆயிரம் வேள்விகள்

     5. பெரிய பு. கூற். நாயனார். 8.
     6. Ep. Ind. XVIII. P. 259. line 8.
     7. My. AR. 1936. No. 16, line, 2.