பக்கம் எண் :

186தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

வேட்பதினும் ஓர் உயிரைக் கொல்லாமையே மேலாம் அறமாகும் என்று
புத்தர் போதித்த அறத்தை வலியுறுத்தி வந்தனர் பௌத்தர்கள். நாடெங்கும்
சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வந்தன.
மக்களுக்குள் ஒழுக்கத்தையும், அமைதியையும், பிற உயிர்கள்மாட்டு
அன்பையும் வளர்ப்பதில் சமண பௌத்தத் துறவிகள் முனைந்து வந்தனர்.
பாண்டி நாட்டில் சமண நிர்க்கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் வாழ்ந்து வந்தனர்
என யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் எழுதுகின்றார். இக்
காரணங்களால் வேள்விகளையும், குல வேறுபாடுகளையும் படிகளாகக்
கொண்டு உயர்ந்து வந்த வைதிக சமயம் தன் செல்வாக்கை இழந்து வந்தது.

     களப்பிரர் காலத்தில் தமிழ் மொழிக்குத் தாழ்வும், பிராகிருதத்துக்கும்
பாலி மொழிக்கும் அரசாங்கச் செல்வாக்கும் கிடைத்தன. எனினும் தமிழ்,
மன்னரின் ஆட்சி மொழி என்ற ஓர் உயர்நிலையினின்றும் இழிந்ததாயினும்
சமயத்தையும் தத்துவத்தையும் ஒழுக்கத்தையும் பொதுமக்களுக்குப் புகட்டும்
நிலைமையை எய்திற்று. தமிழில் போதித்தாலொழியத் தத்தம் சமயங்கள்
மக்களின் கருத்தைக் கவரா எனப் பௌத்தரும் சமணரும் நன்கு உணர்ந்தனர்.

     பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில்
‘திராவிட சங்கம்’ ஒன்றை நிறுவினார் (கி. பி. 470). சமண அறத்தைப்
பரப்புவதும், சமணக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத்
தோற்றுவிப்பதுமே இச் சங்கத்தின் நோக்கமாகும். பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் பல இச் சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம்.
மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத்
தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி
ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்
திராவிட சங்கத்தின் தொண்டே காரணமாகும். எதையும் ஏற்றுக்கொள்ளும்
விரிந்த உளப்பான்மையும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காணும் பண்பும் வாய்க்கப் பெற்றிருந்த தமிழர்கள் புறச்
சமயத்தார்கள் மேற்கொண்ட தமிழ் வளர்ச்சிப் பணிகளைப் பாராட்டி
ஏற்றுக்கொண்டனர். பௌத்த சமண அறவொழுக்கங்கள் பலவற்றையும்
அவர்கள் பின்பற்றலானார்கள். தாம் எண்ணிய சமயத்தை எண்ணியாங்குத்
தழுவிக்கொள்ளும் பண்பாட்டைச் சிறப்புரிமையாகக் கொண்டிருந்தனர் என
அறிகின்றோம். சமணரும், பௌத்தரும், வைதிகரும், ஏனையோரும்