மன்னரைப் பற்றிய காலமோ தலைமுறைகளோ இன்னும் திருத்தமாக வரையறுக்கப் படவில்லை. இவற்றைப்பற்றிய விளக்கங்களை ஒருவாறு அறியத் துணைசெய்பவை பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடிச் செப்பேடுகள்,6 சின்னமனூர்ச் சிறிய செப்பேடுகள்,7 சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகள் (இவை இரண்டும் இராசசிம்மன் வழங்கியவை), சென்னைக் கண்காட்சி சாலையில் உள்ள செப்பேடுகள் (சீவரமங்கலத்தவை), ஆனைமலையில் கண்டெடுக்கப்பட்ட மாறன் சடையன் கல்வெட்டு ஒன்று, பராந்தகன் கல்வெட்டு ஒன்று (கி.பி. 770), இரண்டாம் வரகுண பாண்டியன் கல்வெட்டு ஒன்று (கி.பி. 870) முதலியவையாம். இவற்றைக்கொண்டு ஆராய்ச்சிகள் புரிந்து கீழ்க்கண்டவாறு பாண்டியரின் ஆட்சி ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் அறுதியிட்டுள்ளனர். பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575-600), மாறவர்மன் அவனிசூளாமணி (கி.பி. 600-625), சடையவர்மன் செழியன் சேந்தன் (கி.பி.625-640), மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 641-670), கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710), மாறவர்மன் அரிகேசரி பராங்குசன், முதலாம் இராசசிம்மன் (கி.பி. 710-765), நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790), இரண்டாம் இராசசிம்மன் (கி.பி. 790-792), வரகுணமகாராசன் (கி.பி. 792-835), சீமாறன் பரசக்கர கோலாகலன் சீவல்லபன் (கி.பி. 835-862), வரகுணவர்மன் (கி.பி. 862-895), பராந்தக பாண்டியன் (கி.பி. 880-905), மூன்றாம் இராசசிம்மன் (கி.பி. 900-920), வீரபாண்டியன் (கி.பி. 946-966). கடுங்கோன் என்ற பாண்டியன் பாண்டி நாட்டைக் களப்பிரரின் கொடுங்கோன்மையிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டில் மீட்டுக்கொண்டான். ‘பாண்டி நாடு கடல் முத்துகளின் களஞ்சியம்; மக்கள் கறுப்பு நிறம், கடுமையானவர்கள்; எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள்; இங்குப் பல சமயங்கள் காணப்படுகின்றன; மக்கள் வாணிகத்திலேயே கண்ணுங் கருத்துமாக உள்ளார்களே ஒழியப் பண்பட்டவர்களாகக் காண்கின்றிலர்’ என்று யுவான்- வாங் எழுதுகின்றார். சிறிது காலமே பாண்டி நாட்டில் தங்கியிருந்து, சிற்சில மக்களையும் பழக்க வழக்கங்களையுமே கண்டறிந்த இந்தச் சீன வழிப்போக்கன் கூறியுள்ள செய்திகள் அவ்வளவும் உண்மை என்று கொள்ளுதல் நலமன்று. அக் காலத்தில் ஒரு சில பிக்குகளே பாண்டி நாட்டில் காணப்பட்டனர்; பௌத்த விகாரைகள் பாழ்பட்டுக் கிடந்தன. களப்பிரர் 6. Ep. Inp. XIII. P. 291. 7. S. I. I. III No. 206. |