பக்கம் எண் :

208தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     இழைத்த கொடுமையினால் மதுரை மாநகரம் தன் பண்பாட்டுச்
சிறப்பையும், பொலிவையும் இழந்து கிடந்தது. மூன்றாம் மன்னனான சேந்தன்
போர்மறம் கெழுமியவன். இவன் சேரரை வென்று வானவரம்பன் என்ற
விருது ஒன்றை ஏற்றான். இவன் மகன் மாறவர்மன் அரிகேசரி என்பவன்.
பெரியபுராணத்தில் நின்றசீர் நெடுமாற நாயனார் என்று பாராட்டப்படுபவனும்
திருவிளையாடற் புராணத்தில் கூன் பாண்டியன் என்றும், சுந்தர பாண்டியன்
என்றும் அழைக்கப்படுபவனும் இம் மன்னனேயாவான். இவன் சேர
வேந்தனையும், குறுநில மன்னர் பலரையும், பாழி, நெல்வேலி, செந்நிலம்
முதலிய ஊர்களில் பொருது. வென்றனன் என்றும், சோழநாட்டின்
தலைநகராகிய உறையூரை ஒரு பகலில் கைப்பற்றினன் என்றும்
வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இப்போருக்குப் பிறகு இவன்
‘வளவர்கோன் பாவை’ யாகிய மங்கையர்க்கரசியை மணந்திருக்க வேண்டும்.
இம் மாறவர்மன் இலங்கையின்மேல் படையெடுத்து வெற்றிமாலை
சூடியதாகவும் தெரிகின்றது. இவனுடைய சிறப்புகளைப்பற்றிப் பேசும்
பாண்டிக்கோவை என்னும் நூல் ஒன்று வரலாற்றுச் செய்திகளையும்
தெரிவிக்கின்றது. இவனுக்கு நெடுமாறன், புலியன், மீனவன், நேரியன்,
வானவன் மாறன், அரிகேசரி, பராங்குசன், விகாரி, அதிசயன், ரணோதயன்,
ரணாந்தகன் என்றெல்லாம் பெயர் வழங்கினவெனப் பாண்டிக்கோவை
தெரிவிக்கின்றது. இந் நூல் முழுவதும் இப்போது கிடைக்கவில்லை. பல
நூல்களின் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட
முந்நூற்றைம்பது செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. இம்மன்னன் முதலில்
சமணனாக இருந்தான் என்றும், அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியார்,
அமைச்சர் குலச்சிறையார் ஆகிய பெருமக்களின் முயற்சியால்
திருஞானசம்பந்த நாயனார் இவனைச் சைவத்துக்கு மீட்டார் என்றும் பெரிய
புராணம் கூறும்.

     அரிகேசரியை அடுத்துப் பட்டங்கட்டிக் கொண்டவன் கோச்சடையன்
ரணதீரன். இவன் போர்த் தொழிலில் வல்லவன். இவன் பல இடங்கட்கும்
படையெடுத்துச் சென்றான். திருநெல்வேலி மாவட்டத்தில்
அம்பாசமுத்திரத்திற்கு அண்மையிலுள்ள மருதூரில் ஆய் என்னும் குறுநில
மன்னனை வென்றான். கொங்குதேசத்தையும் வென்று கொங்கர் கோமான்
என்றொரு விருதையும் சூடினான். மங்களூர், அதாவது மங்கலாபுரம் என்ற
ஊரில் இவன் மராட்டியர்மேல் போர் தொடுத்து வெற்றி கொண்டான் எனவும்
அறிகின்றோம்.