பக்கம் எண் :

பல்லவர்கள் 209

     முதலாம் மாறவர்மன் இராசசிம்மன் மிகப் பெரிய வீரன்; ஆட்சித் திறன்
வாய்ந்தவன். இவன் நந்திபுரத்தை முற்றுகையிட்டு நந்திவர்ம பல்லவனைப்
புறமுதுகிடச் செய்தான்; காவிரிக் கரைப் பகுதிகளைக் கைப்பற்றினான்.
நந்திபுரத்துப் போரில் தான் நந்திவர்மனின் படைத் தலைவனான
உதயசந்திரன் தன் மன்னனின் துணைக்கு விரைந்து சென்று அவனை
மீட்டான். இம் மாபெரும் வீரனின் சிறந்த தொண்டைப் பாராட்டிப் பல்லவ
மன்னன் இவனை வில்வலம் என்ற ஊருக்குக் குரிசில் ஆக்கினான். வட
ஆர்க்காடு மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு அண்மையில் உள்ள ஊர் ஒன்று
இவன் பேரால் உதயசந்திரபுரம் என்று இன்றளவும் விளங்கி வருகின்றது.
பல்லவ மன்னனை வென்று பல்லவ பாஞ்சனன் என்று ஒரு விருதையும்
இராசசிம்மன் தன் பெயருடன் இணைத்துக்கொண்டான். கொங்குதேசப்
போர்களில் இம் மன்னனுக்குக் கிடைத்த வெற்றிப் பரிசுகளில் கொடுமுடியும்
ஒன்றாகும். இவன் மேலைக்கங்கரின் அரசிளங்குமரி பூசுந்தரி என்னும்
ஒருத்தியை மணந்தான்; சளுக்க மன்னன் கீர்த்திவர்மனை ஒரு போரில்
தோல்வியுறச் செய்தான்; கூடல் (மதுரை), வஞ்சி, கோழி (உறையூர்) ஆகிய
ஊர்களிலிருந்த அரண்மனைகளையும், கோட்டை கொத்தளங்களையும்
புதுப்பித்தான். மேலும், இவன் கோசகசிரங்கள், இரணிய கருப்பங்கள்,
துலாபாரங்கள் போன்ற ‘மகாதானங்கள்’, அதாவது பெருங்கொடைகள் பல
வழங்கினனென அறிகின்றோம்.

     முதலாம் இராசசிம்மனையடுத்து அரியணை ஏறியவன் நெடுஞ்சடையன்
பராந்தகன் என்பவன். இவன் கங்கநாட்டு இளவரசி பூசுந்தரி வயிற்றில்
பிறந்தவன். வேள்விக்குடிச் செப்பேட்டுத்8 தானங்களை வழங்கிய மன்னன்
இவனேயாவான். இவன் முன்னோனான பல்யாகசாலை முதுகுடுமிப்
பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் கொற்கைகிழான் நற்கொற்றனுக்கு
வழங்கிய வேள்விக்குடி என்ற ஊரைக் களப்பிரர் கவர்ந்துகொண்டனர். அக்
கொற்கைகிழான் கால்வழியினனான நற்சிங்கன் என்ற பெயரவன் ஒருவன் இம்
மன்னன் முன்பு தன் உரிமையை யெடுத்துக்கூறி அவ்வூரை மீண்டும் தன்பால்
உரிமையாக்குமாறு முறையிட்டுக்கொண்டான். அவனுடைய வேண்டுகோளுக்கு
இசைந்து அவ்வூரை நெடுஞ்சடையன் பராந்தகன் அவனுக்கே மீட்டுக்கொடுத்த
சாசனமே வேள்விக்குடிச் செப்பேடுகள் என்பன. அவை இப்போது இலண்டன்
பொருட்காட்சிச் சாலையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

     8. Ep. Ind. XVII. p. 116.