பக்கம் எண் :

210தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

வேள்விக்குடிச் செப்பேடுகளும், சென்னைப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள
சீவரமங்கலச் செப்பேடுகளும்,9 ஆனைமலைக் கல்வெட்டுகளும்,
திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டுகளும் கிடைத்திராதிருப்பின் களப்பிரரைப்
பற்றியும், இடைக்காலப் பாண்டிய மன்னரின் வரலாறுகளையும் நாம்
அறிந்துகொள்ள இயலாது.

கொங்குநாடும் சேரநாடும்

     கொங்குநாடு பல தொல்லைகளுக்குட்பட்டுக் கொண்டிருந்தது.
மேலைக் கங்கர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் ஆகியவர்கள்
ஒருவருக்குப்பின் ஒருவராகக் கொங்கு நாட்டின்மேல் படையெடுத்தபடியே
இருந்தனர். சங்க காலத்துக்குப் பிந்திய சேரநாட்டைப்பற்றிய செய்திகள்
விரிவாகக் கிடைக்கவில்லை. மாகோதைச் சேரர் என்றவர் ஆண்டனரெனக்
கூறப்படுகிறது. சேரமான் பெருமாள் என்ற பெயர் கொண்ட மன்னர் சிலர்
ஆண்டுவந்தனர் என அறிகின்றோம். ஆறாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டில்
கிறித்தவ சமயம் அண்டிவிட்டதாகக் ‘கிறித்தவ நிலப்பரப்புகள்’ என்னும் தம்
நூலில் காஸ்மாஸ் இந்திகோ பிளியுஸ்டீஸ் என்பார் எழுதுகின்றார்.
பாண்டியருடைய கல்வெட்டுகள் சிலவற்றிலிருந்து சேரநாட்டின் வரலாற்றை
ஒருவாறு ஆய்ந்தறியலாம். பாண்டியர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டின்
முடிவுவரையில் சேர நாட்டு ஆய் மன்னர் ஆண்டுவந்த பகுதிகளின்மேல்
பன்முறை படையெடுத்தனர். பாண்டிய மன்னன் அரிகேசரி ஆய்நாட்டின்மேல்
படையெடுத்தான். அவன் மகன் கோச்சடையன் ரணதீரன் மருதூர்ப் போரில்
ஆய் மன்னனைப் பொருது வெற்றிகண்டான்; அடுத்து இரு பாண்டி
மன்னர்கள் சேரநாட்டின்மேல் அடுத்தடுத்துப் படையெடுத்தனர். மாறன்
சடையன் ஆய் மன்னனையும், வேணாட்டு மன்னனையும் போரில் வென்றான்.
வேணாட்டு மன்னனைப் போரில் வென்றதுமன்றி அவனைக் கொன்று
அவனுடைய யானைகளையும் குதிரைகளையும் கவர்ந்து சென்றான். ஆய்குல
மன்னன் கருநந்தடக்கன் கி.பி. 857-ல் அரியணை ஏறினான். தென்
திருவிதாங்கூர் முழுவதும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது
சுசீந்திரமும் கன்னியாகுமரியும் பாண்டியர் வயம் இருந்தன. கருநந்தடக்கன்
மகன் வரகுணன் கி.பி. 885-925 ஆண்டுகளில் ஆட்சி புரிந்தான். வரகுணன்
காலமான பிறகு ஆய்குலம் வரலாற்றிலிருந்து மறைந்து விடுகின்றது.

     9. Ind. Ant. Vol. XII p. 69, 25.