பக்கம் எண் :

பல்லவர்கள் 211

குறுநில மன்னர்கள்

     வாணகோவர்கள் சாதவாகனரின்கீழ்க் குறுநில மன்னராக இருந்து
வந்தனர். பிறகு அவர்கள் பல்லவரின் மேலாட்சிக்கு உட்பட்டு நாடாண்டு
வந்தனர். இவர்களைப்பற்றிய குறிப்புகள் கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல்
கிடைக்கின்றன. தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் இவர்களுடைய
கல்வெட்டுகள் கிடைக்கின்றன. எனவே, இன்ன பகுதியைத்தான் இவர்கள்
ஆண்டு வந்தார்கள் என்று அறிய முடியவில்லை. காலத்துக்கேற்றவாறு
அவர்கள் இடம் மாறி ஆண்டு வருவது வழக்கமெனத் தெரிகின்றது.
வாணகோவர்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தென்னார்க்காட்டுப்
பகுதியிலிருந்து அரசாண்டு வந்தனர். அப்போது அவர்கள் பல்லவர்களுக்குத்
திறை செலுத்திவந்தனர். களப்பிரர் ஆட்சியின்கீழ் இவர்கள் இன்ன நிலையில்
இருந்தார்கள் என்று அறிந்துகொள்ள முடியவில்லை. பல்லவருக்கும்
சளுக்கருக்கும் நேரிட்ட பூசல்களில் வாணகோவர்கள் மேலைச் சளுக்கருடன்
நட்புக் கொண்டிருந்தனர். ரேனாண்டுச் சோழ மன்னன் புண்ணிய குமாரனின்
கல்வெட்டு10 ஒன்று, அவன் பெண்ணாற்றங்கரை வரையில் பரவியிருந்த
வாணகோவரின் நாட்டையும் ஆண்டுவந்தான் என்னும் செய்தியைக்
கூறுகின்றது. எனவே, பிறகு வாணகோவர்கள் மேலைச் சளுக்கருடனும்
முரண்பட்டிருந்தார்கள் என்று ஊகிக்க வேண்டியுள்ளது. வாணகோவர்கள்
வாணமன்னன் ஜயநந்திவர்மன் (கி.பி. 733-772) காலத்தில் பல்லவருக்குத்
திறை செலுத்துபவரானார்கள். அவர்கள் பல்லவருக்குத் துணைநின்று
மேலைக் கங்க மன்னன் ஸ்ரீபுருஷன் மேல் போர் தொடுத்தார்கள்.
இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கோவிந்தன் கையில் தந்திவர்ம பல்லவன்
தோல்வியுற்ற பிறகு (கி.பி. 806), வாணகோவர்கள் இராஷ்டிரகூடருடன்
சேர்ந்து கொண்டார்கள். மேலைக் கங்க மன்னன் முதலாம் இராச மல்லன்
பல்லவர்மீது படையெடுத்தான். அப்போது வாணகோவரை வென்று அவர்கள்
நாட்டைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான். ஆனால், விதியின்
விளையாட்டினால் வாணகோவர்கள் மீண்டும் பல்லவரின் மேலாட்சியின்கீழ்
இயங்கி வரலானார்கள். வாணகோவர்கள் பலவகையான அரசியல்
சூழ்நிலையால் அலைப்புண்டு திருப்புறம்பயம் போருக்குப் (கி.பி. 895) பிறகு
முழுச் சுதந்தரம் பெற்றார்கள்.

     போரிலும் நிரைகவர் சச்சரவுகளிலும் இறந்துபட்ட வீரர்களுக்கு வீரக்கல்
நாட்டும் வழக்கம் வாணகோவரிடையே

     10. Ep. Rep. 284, 37-38.