பக்கம் எண் :

214தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     மார்ப்பிடுகு முத்தரையனையடுத்து விடேல்விடுகு முத்தரையன்
குவாவன்சாத்தன் (சு.கி.பி. 791-826) பட்டமேற்றான். இவன் பாண்டியனின்
மேலாட்சிக்குட்பட்டிருந்தவன் என மாறன் சடையனின் செந்தலைக்
கல்வெட்டினின்றும்13 ஊகிக்கலாம். பாண்டியர் நெடுநாள் காவிரிக்கரையில்
ஆட்சி புரியவில்லை. அதைவிட்டு அவர்கள் விலகிய பிறகு முத்தரையர் முழு
உரிமையுடன் அரசாளத் தொடங்கினர்.

     விடேல்விடுகு முத்தரையன் குவாவன்சாத்தன் மகன் சாத்தன் பழியிலி
என்பான் (சு. கி. பி. 826-851) தன் தந்தைக்குப் பிறகு அரசு கட்டில் ஏறினான்.
இவன் கற்றளி ஒன்று குடைவித்தான் என்று நார்த்தாமலைக் கல்வெட்டு14
ஒன்று கூறுகின்றது. சாத்தன் பழியிலிக்குப் பெரும்பிடுகு, விடேல்விடுகு,
மார்ப்பிடுகு போன்ற விருதுகள் அக் கல்வெட்டில் காணப்படவில்லை. எனவே,
சாத்தன் பழியிலி பல்லவரின் மேலாட்சியினின்றும் விடுதலை
வெற்றிருக்கவேண்டும் என்று ஊகிக்க இடமேற்படுகின்றது. இவனுடைய
ஆட்சியில்தான் சோழ மன்னன் விசயாலயன் தஞ்சையை முத்தரையரின்
பிடியினின்றும் விடுவித்துக் கொண்டான். பல்லவர்கள் அப்போது
முத்தரையருக்குத் துணைநின்றதாகச் சான்றுகள் இல.

     புதுக்கோட்டைப் பகுதியில் நிருபதுங்க பல்லவன் தன் ஆட்சியை
விரிவுபடுத்தியபோது மீண்டும் வழக்கம்போல் முத்தரையர் பல்லவருக்குத்
தாழ்ந்து வந்திருந்தனர். மெல்ல மெல்லச் சோழர் புதுக்கோட்டைப்
பகுதியின்மேல் தம் செல்வாக்கைச் செலுத்தலானார்கள்; நார்த்தாமலையில்
விசயாலய சோழீசுவரம் என்ற சிவன் கோயில் ஒன்றை எழுப்பினர். முதலாம்
ஆதித்த சோழன் கொடும்பாளூர்க் குறுநில மன்னரிடம் பெண்கொண்டான்.
திருப்புறம்பயம் போருக்குப் பிறகு பாண்டியரின் செல்வாக்குக் குன்றிவந்தது.
எனவே, முத்தரையர் சோழருடைய மேலாட்சிக்குத் தலைகுனியலானார்கள்
என்று கொள்ளலாம். களப்பிரரைத் தொடர்ந்து முத்தரையர் சோழப் பேரரசு
ஒன்று வளர்வதற்குப் பெருந் தடையாக இருந்து வந்தனர். அவ்வப்போது
பல்லவர், சோழர், பாண்டியர் ஆகியவர்களுடன் மாறி மாறிக் கூட்டுறவு
மேற்கொண்டதாலும், தனித்து நின்று தமக்கெனச் சுதந்தர உரிமைகள் தேடிக்
கொள்ளாததாலும் முத்தரையரின் கை சாய்ந்துவந்தது. முத்தரையர் சோழரிடம்
தோல்வியுற்றுத் தஞ்சையைக் கைவிட்டதும் பல்லவருக்கும்

     13. Ep. Rep. 10/899.
     14. S.I.I. XII No. 63.