பக்கம் எண் :

பல்லவர்கள் 213

நெருக்கடியில் சுவரன்மாறன் முத்தரையன் பல்லவனுக்கு ஆற்றிய பணி மிகப்
பெரிதாகும். அவன் பாண்டியரையும் சேரரையும் கொடும்பாளூர், மணலூர்,
திங்களூர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மறங்கூர், அண்ணல்வாயில்,
செம்பொன் மாறி, வெங்கோடல், புகலி, கண்ணனூர் ஆகிய இடங்களில்
போரிட்டு வென்றான் என்று செந்தலைக் கல்வெட்டுக் கூறுகின்றது.
வேள்விக்குடிச் செப்பேடுகள் இவற்றுள் கொடும்பாளூர்ப் போர் ஒன்றினையே
குறிப்பிடுகின்றன; அதிலும் அப்போரில் பாண்டியனே வெற்றி
கொண்டதாகவும் கூறுகின்றன. எனினும், போர் நடந்ததற்குச் சான்று ஒன்று
உள்ளதால் முத்தரையன் ஏதேனும் ஒரு போரில் வெற்றி கண்டிருப்பான்
என்பதில் ஐயமில்லை. சுவரன்மாறனுக்குச் சத்துருகேசரி, அபிமானதீரன்,
கள்வர்கள்வன், அதிசாகசன், ஸ்ரீதமராலயன், நெடுமாறன், வேள்மாறன் முதலிய
விருதுப் பெயர்கள் உண்டு.

     சுவரன்மாறனை அடுத்து விடேல் விடுகு விழுப்பேரடி அரசன் என்ற
சாத்தன்மாறன் (சு.கி.பி. 745-சு.770) முடிசூட்டிக் கொண்டான். இவன்
சுவரன்மாறனின் மகன் என்று கொள்ளுவதற்குச் சான்றுகள் உள்ளன. பல்லவ
மன்னரும் ‘விடேல் விடுகு’ என்ற விருதைத் தாங்கி வந்திருப்பது இங்குக்
குறிப்பிடத் தக்கதாகும். இம் முத்தரையன் காலத்தில் நெடுஞ்சடையன்
பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பெண்ணாகடத்தில் பல்லவரை
முறியடித்துச் சோழர்மேல் பெரும் வெற்றியொன்றைக் கொண்டான். இப்
போரில் முத்தரையர்கள் பங்கு கொண்டதும் கொள்ளாததும் விளங்கவில்லை.

     அடுத்துப் பட்டத்துக்கு வந்தவன் மார்ப்பிடுகு பேரடியரையன் (சு.கி.பி.
770-791) என்பான். இவன் விடேல்விடுகு விழுப்பேரடி முத்தரையனுடன்
எவ்வகையான உறவு பூண்டவன் என்பது தெரியவில்லை. இவன் நந்திவர்ம
பல்லவனின் உடன் காலத்தவன். இவன் ஆட்சியின்போது பாண்டியன்
நெடுஞ்சடையன் இரண்டாம் முறையும் சோழ நாட்டின்மேல்
படையெடுத்துவந்து ஆயிரவேலி, அயிரூர், புகழியூர் என்ற இடங்களில்
கொங்கு மன்னன்மேல் வெற்றி கொண்டான். இப்போர்களில் கொங்கு
மன்னனுக்குப் பல்லவரும், சேர மன்னரும் துணை நின்றனர். பல்லவர்
தோல்வியுற்றுத் தம் காவிரிக்கரை நாடுகளை இழந்தனர். இப் போர்களில் இம்
முத்தரைய மன்னன் கலந்துகொண்டதும், கொள்ளாததும் தெரியவில்லை.
ஆலம்பாக்கத்தில் ‘மார்ப்பிடுகு ஏரி’யைக் கட்டினவனும், திருவெள்ளறையில்
‘மார்ப்பிடுகு பெருங்கிணறு’ தோண்டியவனும் இவனேயாவான்.12

     12. S.I.I. XIII. No. 222; Ep. Ind. Vol. XV p. 156.