பக்கம் எண் :

218தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

ஒளவையார் இருபத்திரண்டு பாடல்கள் பாடியுள்ளார். அவை யாவும்
புறநானூற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன. இவனுடைய புகழ் வேறுபல சங்க
நூல்களிலும் பாடப்பட்டுள்ளது. அதிகமான்கள் தகடூரினின்றும் ஆண்டுவந்த
குறுநில வேந்தர்கள். ஓர் அதிகமான் பெரியபுராணத்தில் புகழ்ச்சோழ
நாயனார் புராணத்தில் இடம் பெற்றுள்ளான்.20 இவ் வதிகமான் கி.பி. 306-600
கால அளவில் வாழ்ந்தவன் எனக் கருதுகின்றனர். ஏழு, எட்டாம்
நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பல்லவ-சளுக்கப் போர்களில் அதிகமான்கள்
யாரும் கலந்து கொண்டனரெனத் தெரியவில்லை. நாமக்கல்லில் உள்ள
அரங்கநாதர் குடைவரைக் கோயில் கல்வெட்டு ஒன்று பல்லவ கிரந்த
எழுத்துகளில் காணப்படுகின்றது. அதில் அக் கோயில் ‘அதியேந்திர விஷ்ணு
கிரகம்’ என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கல்வெட்டில்
அதிகமான்களின் விருதுப் பெயர்களும் எண்ணப்படுகின்றன. இதைக் கொண்டு
நாமக்கல் வரையில் அதிகமான்கள் ஆட்சி பரவியிருந்தது எனக்
கொள்ளத்தகும்.

     பராந்தகன் நெடுஞ்சடையன் என்ற பாண்டியன் (கி.பி. 765-790)
ஆயிரவேலி, அயிரூர், புகழியூர் என்னும் இடங்களில் ஓர் அதிகமானை
வென்றான் என அறிகின்றோம்.

     பிற்றைய காலத்தில் தகடூர் நாடு நுளம்ப பல்லவருக்கு அடிமைப்பட்டு
நுளம்பபாடி என்று பெயர் பெற்றது. முதலாம் இராசராச சோழன் நுளம்பரை
வென்றான். அந் நிகழ்ச்சிக்குப் பின்பு அதிகமான்கள் சோழரின்கீழ்ச்
சிற்றரசராகவும், உயர்தர அலுவலராகவும் விளங்கலானார்கள். தமிழக
வரலாற்றில் அதிகமான்களின் பெயர் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையில்
காணப்படுகின்றது. அதிகமான் மன்னர்கள் குடிமக்களுடன் இயைந்து
வாழ்ந்தவர்கள் என ஊகிப்பதற்கு இடமுண்டு. அவர்கள் பெயரால் பல
ஊர்கள் அமைந்துள்ளன. அதிகமநல்லூர் (அதிகமான்நல்லூர் - செங்கற்பட்டு
மா. வ.), அதியனூர் (வ.ஆ. மாவட்டம், கன். கு. மா. வ.), திருவதிகை
(தெ. ஆ. மாவட்டம்), நெடுமானூர் (நெடுமான் அஞ்சியூர்- தெ. ஆ. மா. வ.),
அதமன்கோட்டை (அதியமான் கோட்டை - தருமபுரி மா. வ.),
அதகப்பாடி(தருமபுரி மா. வ.) என்னும் ஊர்ப் பெயர்கள் அதிகமான்களின்
ஆட்சியை நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

     அதிகமான்கள் சைவம் வைணவம் இரண்டையும் வளர்த்தவர்கள்.
நாமக்கல் அரங்கநாதர் கோயில் அதிகமான் மன்னன்

     20. பெரி. பு. புகழ்ச். 17-30