பக்கம் எண் :

பல்லவர்கள் 217

காலத்தைக் கண்டராதித்தியன் காலத்துக்கு முற்பட்டதாகக்
கொள்ளுவதற்கில்லை. எனவே, இந்தப் பூதி விக்கிரமகேசரி யானவன்
இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் சோழ நாட்டின்மேல் படையெடுத்து
வந்தபோது போர்க்கோலங் கொண்டு அவன்மேல் வெற்றி கண்டுள்ளான்.
எனவே, பல்லவன் என்னும் சொல் ‘வல்லபன்’ என்னும் சொல்லின் மரூஉவாக
இருக்கலாம் என்று ஊகிக்க வேண்டியுள்ளது. இக் கருத்துக்கு மாறுபட்ட
கருத்துகளும் வரலாற்றாய்வாளரிடம் காணப்படுகின்றன.

     கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயிலைக் கட்டியவர்கள் இருக்கு
வேளிர்கள், இவர்கள் காளாமுக அல்லது பாசுபத சைவத்தின் வளர்ச்சிக்கு
உதவியுள்ளனர்.

     சோழப் பேரரசானது 12ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்ற பிறகு இருக்கு
வேளிர்களின் செல்வாக்கும் மங்கிவரலாயிற்று. சோழப் பேரரசில் இவர்கள்
பல பெரும் ஆட்சிப் பொறுப்புகளைச் செலுத்தி வந்துள்ளனர். இருக்குவேள்,
இருங்கோவேள் என்பன ஒரு பொருட் பெயர்கள். சோழர் ஆட்சிக் காலக்
கல்வெட்டுகள் சிலவற்றில் ‘மும்முடிச் சோழ இருக்குவேள்’ என்ற பெயரும்
வழங்கியதாகக் குறிப்புகள் உள்ளன. மூவேந்த வேளான், இளங்கோ வேளான்
என்ற பெயர்களும் இருக்கு வேளிரைக் குறிக்கின்றன. இவர்கள் சோழரின்
அரசமைப்பில் செயலாளராகவும், நாட்டுக் கண்காணிப்பாளராகவும், கோயில்
நிருவாகிகளாகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். சோழேந்திரசிங்க மூவேந்த
வேளான், நெறியுடைச் சோழ மூவேந்த வேளான், உதயமார்த்தாண்ட
மூவேந்த வேளான், வீரசோழ இருங்கோ வேள், குலோத்துங்க மூவேந்த
வேளான், பரகேசரி மூவேந்த வேளான், சோழன் மூவேந்த வேளான்,
இராசேந்திரசிங்க மூவேந்த வேளான் என்ற பெயர் படைத்த இருக்கு
வேளிர்கள் பெரிய ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அதிகமான்கள் (கி.பி. 550-880)

     சங்க காலத்திலிருந்தே இலக்கியத்திலும் வரலாற்றிலும் அதிகமான்கள்
இடம்பெற்று வந்துள்ளனர். ‘அதிகன் என்ற ஒரு வள்ளல் தனது நாட்டின்
உயர்ந்த மலையில் பழுத்துக்கனிந்த நெல்லிக் கனியை ஒளவையாருக்கு
ஈந்தான்’ என்று சிறுபாணாற்றுப்படை19 தெரிவிக்கின்றது. இந்த அதிகமான்
மேல்

     19. சிறுபாண். 98-103.