பக்கம் எண் :

தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை 229

பாடியுள்ளார். இப் பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பின்னர்த் தோன்றிய
நம்பியாண்டார் நம்பிகள் ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்னும் நூல்
ஒன்றை இயற்றினார். இவ் வந்தாதியை அடிப்படையாகக் கொண்டுதான்
சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தை
இயற்றினார்.

     திருவாரூரில் கோயில் தொண்டு செய்தும் ஆடியும் பாடியும்
தியாகேசனை வழிபட்டுவந்த பதியிலாரானவரும் உருத்திர கணிகையர்
குலத்துத் தோன்றியவருமான பரவையார் என்பவரைச் சுந்தரர் மணந்தார்.
திருவொற்றியூரில் வேளாளர் குலத்துப் பிறந்த சங்கிலியார் என்ற மற்றொரு
பெண்ணையும் பின்னர் அவர் மணம் புரிந்தார்.

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரநாட்டு வேந்தரான சேரமான் பெருமாள்
என்பவருடைய நட்பைப் பெற்றவராய் அவர்பால் மிகவும்
ஈடுபாடுடையவரானார். அவருடைய அழைப்புக்கு இணங்கி அவர்
சேரநாட்டுக்குச் சென்றுவந்தார். கொங்கு நாட்டில் திருமுருகன்பூண்டிக்கு
அண்மையில் ‘வடுகர்’2 என்ற வழிப்பறி கள்வர்கள் சுந்தரருடைய
பொருள்களைக் கவர்ந்தனர் என்று அவருடைய தேவாரப் பதிகம் ஒன்றினால்
அறிகின்றோம். அவிநாசியில் பல ஆண்டுகட்கு முன்பு முதலையுண்ட
பார்ப்பனச் சிறுவன் ஒருவனைச் சுந்தரர் மீண்டும் அழைத்துக் கொடுத்தார்
என்று பெரிய புராணம் கூறும். இவர் பாடிய அவிநாசிப் பதிகத்தில்
‘....புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப்
பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என்று வரும் சொற்களை அந்
நிகழ்ச்சிக்குச் சான்றாக எடுத்துக்காட்டுவர்.

     சுந்தரர் பதினெட்டு ஆண்டுகள் இவ்வுலக வாழ்வில் தங்கினார்.
இறுதியில் சேரமான் பெருமாளுடன் தம் பூத உடம்புடன் கயிலைக்குச் சென்று
சிவபெருமானின் திருத்தொண்டில் அமர்ந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
கயிலைக்குச் செல்லத் தொடங்குமுன்பு தம் ஊன் உடம்பு அறிவு உடலாக
மாறிற்று என்றும் தாம் மரணத்தை வென்றுவிட்டதாகவும் இவர் தம் பதிகம்
ஒன்றில் தெரிவிக்கின்றார்.

     சுந்தரரின் பாடல்களில் இறைவனிடத்தில் அவர் கொண்டிருந்த
இடையறாத அன்பு மட்டுமன்றிப் பல இலக்கியச் சுவைகளையும்

    2. தேவாரம். 7 : 49 : 1