பக்கம் எண் :

230தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

நுண்மைகளையும் கண்டு இன்புறலாம். நகைச்சுவை, பிணக்கு, கொஞ்சுதல்,
கெஞ்சுதல், மிஞ்சுதல், சினம் ஆகிய பல மெய்ப்பாடுகளையும் இவர் தேவாரப்
பாடல்களில் காணலாம்.

     திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் முத்திபெற்ற பிறகு சில
ஆண்டுகளில் சுந்தரர் பிறந்தார் என்று கொள்ளுவதற்குச் சான்றுகள் உள.
இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் வாழ்ந்தவர் எனச் சிலர் கருதுவர். சுந்தரர் தம்
திருத்தொண்டத் தொகையில் ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்’ என்று தாம் வாழ்ந்த
காலத்து ஆட்சி புரிந்துவந்த பல்லவ மன்னனைக் குறிப்பிடுகின்றார்.
கழற்சிங்கன் என்னும் பெயரில் ‘கழல்’ என்பது கழலையணிந்தவன் என்று
பொருள் விரியும். சிங்கன் என்பவன் கழலை யணிந்த மன்னவன். பல்லவர்
பரம்பரையில் இரண்டு சிங்கர்கள் அதாவது சிம்மர்கள் அரசாண்டு வந்தனர்.
ஒருவன் முதலாம் நரசிம்மவர்மன். இவனே வாதாபி கொண்டவன். அடுத்தவன்
இராசசிம்மன் என்று வழங்கும் இரண்டாம் நரசிம்மனாவான். இவ்விரு
மன்னருள் முதலாம் நரசிம்மவர்மன் திருஞானசம்பந்தர், அப்பர் காலத்தவன்.
எனவே, இவ்விரு சமய குரவர்களுக்கும் பிந்தியவரான சுந்தரர் இவன்
காலத்தராக இருக்க முடியாது. ஆகவே, இவரை இரண்டாம் நரசிம்மவர்மன்
காலத்தவராகக் கொள்ளுதலே பொருத்தமானதாகக் காணப்படுகின்றது. சில
ஆய்வாளர் இவரை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதுகின்றனர்.
அது ஒப்பத் தக்கதன்று.

     இந்த இரண்டாம் நரசிம்மன் சிவசூடாமணி என்று புகழ்ந்து பாராட்டப்
பட்டவன். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை எழுப்பியவன்; இரண்டாம்
நரசிம்மவர்மன் காலம் கி.பி. 690-728. சுந்தரரை எடுத்து வளர்த்த
நரசிங்கமுனையரையர் பல்லவருக்குத் திறை செலுத்தி வந்தவர். சுந்தரர்
காலத்தில் பல்லவரும், சேரரும், சோழரும், பாண்டியரும் ஒன்றுபட்டு வாழ்ந்த
காலம் என்று கருதலாம். சேரமான் பெருமாள் சுந்தரருடன் மதுரைக்குச்
சென்றதும் அங்கு இவ்விருவரையும் பாண்டிய மன்னனும் அப்போது
அவனுடன் இருந்த சோழன் ஒருவனும் வரவேற்றார்கள் என்பதே இதற்குச்
சான்றாம்.

     தேவாரப் பாடல்கள் யாவும் இசையுடன் பாடவேண்டியவை.
அக்காலத்தில் தமிழ்ப் பண்கள் சீரும் சிறப்பும் பெற்று மக்களால்