| பயிலப்பட்டு வந்தன. தமிழ்ப் பண்களுள் பகலில் பாட வேண்டியவை என்றும், இரவில் பாட வேண்டியவை என்றும் பாகுபாடு உண்டு. தேவார ஆசிரியர் காலத்தில் பயின்று வந்த பண்களின் தொகை நூற்று மூன்றாகும். ‘ஏழிசையாய், இசைப்பயனாய்’ என்று சுந்தரர் இறைவனைப் பாராட்டிப் பாடுவதிலிருந்து அவருடைய நாள்களில் இசைக்கு அளிக்கப்பட்டிருந்த பெருஞ் சிறப்பானது தெளிவாகின்றது.3 இசையை வளர்ப்பதற்கென்றே பாணர்கள் என்பவர்கள் தமிழகத்தில் பண்டைய காலந்தொட்டு ஒரு தனிக் குலமாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் பல்லவர்கள் காலத்தில் வைணவமும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரண்டாம் நந்திவர்மன் காஞ்சிபுரத்தில் வைகுண்டப் பெருமாள் கோயில், பரமேசுர விண்ணகரத்துக் கோயில், மதங்கேசுரர் கோயில் ஆகியவற்றை எழுப்பினான். அவனுடைய பட்டத்தரசி முத்தீசுரர் கோயிலைக் கட்டினாள். இந் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்தவர் திருமங்கையாழ்வார். இவருடைய பாசுரங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ‘பெரிய திருமொழி’ என்னும் பெயரில் இரண்டாம் ஆயிரமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. திருமங்கை யாழ்வாரின் பாசுரங்கள் முழுமைக்கும் பண்களும் தாளங்களும் வகுக்கப் பட்டிருந்தன என்பது அவற்றுக்குப் பேருரைகள் வழங்கியவர்களின் வாக்கினால் தெரிந்துகொள்ளலாம். இவருடைய பாடல்களில் எட்டாம் பத்து, ஏழாம் திருமொழியின் இறுதிப்பாட்டில் ‘..... தமிழ்இவை விழுமிய இசையினோடு ஒலிசொலும் அடியவர் உறுதுயர் இலரே’ என்னும் குறிப்பு இவ்வுண்மையை எடுத்துக் காட்டுகின்றது. வைணவ சமயத்தில் நெஞ்சை அள்ளும் பாடல்களைப் பாடித் தமிழகத்தில் பக்தி வெள்ளம் பெருக்குவித்தவர்கள் ஆழ்வார்கள். அவர்களுள் சிலர் சைவக் குரவரின் உடன் காலத்தவர் ஆவார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களுள் ஒருவர் ஆண்டாள் என்பவர். தமிழகத்தின் பல இடங்களிலும் தோன்றியவர்கள் ஆழ்வார்கள். நால்வர் பல்லவ நாட்டைச் சார்ந்தவர்கள் ; சோழ நாட்டினர் மூவர்; சேர நாட்டினர் ஒருவர்; பாண்டிய நாட்டைச் சார்ந்தவர் நால்வர். அவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகராழ்வார், 3. தேவாரம். 7 : 51 : 10 |