பக்கம் எண் :

240தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

நந்திக் கலம்பகம்

     தெள்ளாறெறிந்த மூன்றாம் நந்திவர்மன்மேல் பாடப்பட்ட நந்திக்
கலம்பகம் என்னும் நூல் பல்லவர் காலத்து எழுந்த நூல்களுள் சிறந்த
தொன்றாகும். இதை இயற்றியவர் இன்னார் என்பது தெரியவில்லை. இப்
பல்லவ மன்னனின் தம்பி ஒருவர் தம் அண்ணனை அறம்பாடிக் கொன்று
தாமே அரசுகட்டில் ஏறும் தீய எண்ணத்துடன் சில நச்சுச் சொற்களை
இடையிட்டு இந் நூலைப் புனைந்தார் என்று செவிவழி வரலாறு ஒன்று
உண்டு. இதற்குச் சான்றுகள் ஏதும் இல. அகச் சான்றுகளாகக் காட்டப்படும்
சில செய்யுள்களும் இடைச்செருகல்கள் என அறிஞர்களால் விலக்கப்
படுகின்றன. மூன்றாம் நந்திவர்மனை நந்திக் கலம்பகம் வானளாவப்
புகழ்கின்றது. இதில் இலக்கியச் சுவை ததும்புகின்றது; வரலாற்றுக் குறிப்புகள்
சிலவும் பொதிந்துள்ளன.

     மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பாரத வெண்பா என்றொரு நூலைப்
பெருந்தேவனார் என்பவர் பாடியதாகத் தெரிகின்றது. இந்நூல் முழுவதும்
இப்போது கிடைக்கவில்லை. சங்க காலத்தில் பாண்டியன் ஒருவன் ஆட்சியில்
பாரதம் ஒன்று இயற்றப்பட்டதாகச் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன.
பிற்காலத்தில் மூன்றாங் குலோத்துங்கன் காலத்திலும் பாரத மொழிபெயர்ப்பு
ஒன்று எழுந்ததாகத் திருவலாங்காட்டுக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.

     பல்லவ மன்னருள் முதலாம் மகேந்திரவர்மன் சில வடமொழி நூல்கள்
இயற்றி உள்ளான். தான் இசை வல்லவனென்னும் ஒரு விருதையும்
புனைந்திருந்தான். இவன் புதிய இசை ஒன்றை அமைத்தான். அதனால்
சங்கீர்ண ஜாதி என்றொரு சிறப்புப் பெயரும் பெற்றிருந்தான். குடுமியா மலை
என்றொரு குன்றின் மேல் உள்ள குடுமிநாதசுவாமி கோயில் பின்புறத்தில்
பெரும்பாறை ஒன்றின்மேல் இசைக்கலை நுணுக்கம் சிலவற்றைப் பொறித்து
வைத்தான். இப்பாறை பதின்மூன்றடிக்குப் பதினான்கடிப் பரப்புள்ளது.
குடுமியாமலை என்பது புதுக்கோட்டையைச் சார்ந்த குளத்தூர்த் தாலுக்காவில்
உள்ளது. இக் கல்வெட்டு வடமொழியில் பொறிக்கப் பட்டுள்ளதேனும், அது
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வழங்கிவந்த இசையையே விளக்கி நிற்கின்றது
எனச் சிலர் கருதுகின்றனர். அண்மையில் பல அறிஞர்களும் அது
பிற்காலத்தில் தோன்றியதெனக் கூறுகின்றனர்.

     9. Ep.Ind.XII pp. 226-237.