| தலைவர்களாகக் காட்சியளிக்கின்றனர். மூவேந்தரும் தனித்தனித் தொள்ளாயிரம் பாடல்களால் பாடப்பட்டமையால் இந் நூலுக்கு முத்தொள்ளாயிரம் என்னும் பெயர் எய்தியது. இந் நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்துள்ளவை நூற்றொன்பது பாடல்களேயாம். இது வெண்பா வகைச் செய்யுளால் ஆனது. இந் நூற் பாட்டுகள் யாவும் சொற்செறிவும் பொருள் இனிமையும் வாய்ந்தவை. இந் நூலைப் பாடினார் பெயரும் வரலாறும் தெரியவில்லை. இவர் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென ஆய்வாளர் கருதுகின்றனர். சமண சமயம் செழிப்புற்று விளங்கிய காலமாகிய கி.பி. 5ஆம் நூற்றாண்டில் கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் என்னும் நூல்கள் இயற்றப்பட்டுப் பெரிதும் மக்கள் கருத்தைக் கவர்ந்திருந்தன எனத் தெரிகின்றது. இவை சமண சமய ஒழுக்கத்தை வலியுறுத்தின.் யாக்கை நிலையாமையும், செல்வம் நிலையாமையும், பொய், கொலை, களவு, காமம், கள் ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்படும் தீங்குகளும் இந் நூல்களில் விரித்துரைக்கப்பட்டன. பதினோராம் சைவத்திருமுறையில் காரைக்கால் அம்மையார் நூல்கள் நான்கு இடம் பெற்றுள்ளன. இவ்வம்மையாரைச் சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகச் சேர்த்துப் பாடியுள்ளார். இவ்வம்மையார் காரைக்காலில் பிறந்து, வாழ்க்கைப்பட்டு, பிறகு உலகை வெறுத்துச் சிவபெருமானை வேண்டிப் பேயுருவம் பெற்றுத் திருவாலங்காட்டில் நடராசப் பெருமானின் எடுத்த திருவடியின்கீழ் என்றும் இருந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இவருடைய பாட்டுகளில் வடமொழிச் சொற்கள் நிரம்ப உள்ளன. எனவே, வடமொழிச் சொற்கள் தமிழில் பரவி இடம் பெற்ற ஒரு காலத்தில் இவ்வம்மையார் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர் வீடு பெற்ற பெருமையையும், தூய்மையையும் திருவாலங்காடு வாய்க்கப் பெற்றிருந்ததனால் அதன்மேல் அடியெடுத்து வைக்க அஞ்சித் திருஞான சம்பந்தர் நகர்ப்புறத்தே ஒதுங்கித் தங்கியிருந்தார் என்று சேக்கிழார் கூறுவார். எனவே, காரைக்கால் அம்மையார் திருஞானசம்பந்தருக்கு முற்பட்டவர் என்பதில் ஐயமின்று. ஆகவே, ஏறத்தாழக் கி.பி. 5, 6ஆம் நூற்றாண்டுகளில் இவ்வம்மையார் வாழ்ந்தவர் எனக் கொள்ளல்தகும். |