பக்கம் எண் :

238தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

திருமந்திரம் மூவாயிரம் செய்யுள்கள் கொண்டுள்ளது. இந்நூல் ஆதியில்
எண்ணாயிரம் பாடல்களைக் கொண்டிருந்ததென்றும் சிலர் கருதுகின்றனர்.
சுந்தரரின் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ளதால் திருமூலர்
8ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல் வேண்டும். தேவார ஆசிரியர்களின்
பாடல்களில் காணப்படும் சொற்றொடர்களும் கருத்துகளும் திருமந்திரத்தில்
பல இடங்களில் எடுத்தாளப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே, திருமூலர்
கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டு வாழ்ந்தவர் எனக் கொள்ளல் தகும்.

     ‘சித்தாந்தம்’ என்னும் சொல்லையும், ‘சமரச சன்மார்க்கம்’ என்னும்
சொற்றொடரையும் முதன் முதல் ஆண்டவர் திருமூலர் ஆவார். சித்தாந்தம்
என்னும் சொல் பிறகு சைவ சித்தாந்த நூல்களுள் சேர்ந்துவிட்டது. ‘சமரச
சன்மார்க்கம்’ என்னும் மேலாம் நிலையைப் பிற்காலத்தவர்களான
தாயுமானவரும் இராமலிங்க அடிகளும் விரித்து விளக்கியுள்ளனர்.

     சைவ ஆகம முடிபுகளும், தந்திரங்களும், மந்திரங்களும், சக்தி
வழிபாடும் திருமந்திரத்தில் மிகுதியாய் இடம் பெற்றுள்ளன. யோக நிலைகளை
விளக்கும் நூலாகவும் திருமந்திரம் விளங்குகின்றது. சமயத்திலும்
தத்துவங்களிலும் எழுந்த மிக அரிய கருத்துகளும், மெய்யறிவு
கைவந்தவர்களின் அனுபவ நிலைகளும், மக்கள் வாழவேண்டிய நிலைகளும்
திருமந்திரத்தில் திருமூலரால் விளக்கப்பட்டுள்ளன. அவருடைய பாடல்கள்
பல, பொருள் விளக்கம் எளிதில் காணவியலாதவாறு சொல்லமைப்புக்
கொண்டுள்ளன. இந் நூல், அடிக்கு நான்கு சீர்கள் கொண்ட கலிவிருத்தம்
என்னும் செய்யுள்களால் ஆனது. ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’8
என்ற ஆன்ற கொள்கையைத் திருமூலர் வலியுறுத்துகின்றார். இறைவனுக்குச்
செய்யும் வழிபாடுகளால் வருந்தும் உயிர்களுக்கு ஒரு பயனும் கிடைக்காது
எனவும், ஆனால் வருந்தும் உயிர்கட்குச் செய்யும் நலம் இறைவனுக்குச்
செய்யும் வழிபாடாக மலரும் என்றும் கூறி அவர் திருநாவுக்கரசரைப்
போலவே உயிர்கட்குத் தொண்டு செய்வதன் பயனை வலியுறுத்துகின்றார்.

     களப்பிரர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் ஒழுக்க நூல்களேயன்றி
இலக்கிய நூல்களுள் சிலவும் இயற்றப்பட்டன. அவற்றுள் சிறந்தது
முத்தொள்ளாயிரம் என்னும் ஒரு நூல் ஆகும். இந்நூலில் சேர சோழ
பாண்டிய மன்னர்கள் பாட்டுடைத்

    8. திருமந். 2108.