பக்கம் எண் :

தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமூக நிலை 237

மலையடிகளார் ‘மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி’ என்னும் தம் நூலில்
மாணிக்கவாசக சுவாமிகள் திருஞான சம்பந்தருக்கும் முற்பட்டவர் என்று
வரையறை செய்துள்ளார். ஆனால், இக் கொள்கை, பிற்கால ஆய்வாளரின்
உடம்பாட்டைப் பெறவில்லை. மாணிக்கவாசகர் தேவார ஆசிரியர் மூவர்க்கும்
காலத்தால் பிந்தியவர் என்று கருதுவதற்குப் பல சான்றுகள் உள்ளன.
திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்ட
காலத்திலேயே மாணிக்கவாசகர் தேவார ஆசிரியர் மூவர்க்கும் பிற்பட்டவர்
என்ற கருத்து வேரூன்றி விட்டிருக்க வேண்டும். அன்றேல், இவருடைய
பாடல்கள் முதல் திருமுறையாக வகுக்கப்பட்டிருக்கும். சுந்தரமூர்த்தி
சுவாமிகளும் தம் திருத்தொண்டத் தொகையில் மணிவாசகரைச்
சேர்க்கவில்லை. மாணிக்கவாசகர் திருக்கோவையாரில் ‘வரகுணனாம்
தென்னவன் ஏத்தும் சிற்றம்பலத்தான்’5 என்று தம் காலத்து வாழ்ந்திருந்த
பாண்டிய மன்னனை வாழ்த்தியுள்ளார். இவ் வரகுணன் சிவபக்தன். இவனைப்
பிற்காலத்தவரான பட்டினத்தடிகளாரும் பாராட்டியுள்ளார்.6 பாண்டியர்
பரம்பரையில் வரகுணன் என்ற பெயருடைய மன்னர் இருவர் ஆட்சி புரிந்து
வந்துள்ளனர். முன்னவன் கி.பி862-880 ஆண்டுகளில் வாழ்ந்தவன்.
இவ்விருவருள் இரண்டாம் வரகுணனே திருக்கோவையாரிலும், பட்டினத்தாரின்
பாடலிலும் பராட்டப்படுபவன் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆதிசங்கரர்
தாம் பாடிய சௌந்தரியலகரியில் ஞானசம்பந்தரைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவருடைய காலம் எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும்.
சங்கரரின் ‘மிண்டிய மாயாவாதம்’7 என்ற தத்துவத்தைக் குறிப்பிட்ட
மாணிக்கவாசகர், காலத்தால் சங்கரருக்குப் பிற்பட்டவர் எனக் கொள்ளல்
பொருத்தமுடைத்து. தேவார ஆசிரியர்கள் பாடாத கோயில்கள் பல
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, மாணிக்கவாசகர் இரண்டாம்
வரகுணபாண்டியன் (கி.பி. 862-880) காலத்தில் வாழ்ந்தவர் எனக்
கொள்ளுதலே சாலவும் ஏற்புடைத்தாகும்.

     சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருப்பது
‘திருமந்திரம்’ என்னும் நூலாகும். இதன் ஆசிரியர் திருமூலர் ஆவார். இவர்
திருத்தொண்டத் தொகையில் நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக
வைத்து எண்ணப்படுகின்றார்.

     5. திருக்கோ. 306.
     6. திருவிடை, மும்மணிக். 28 : 55
     7. திருவா. போற்றித். 54.