| ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று தொன்றுதொட்டுவரும் கூற்று ஒன்று உண்டு. ‘திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்து உருகக் கண்கள் தொடுமணல் கேணியில் சுரந்து நீர் பாய, மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிப்பு எய்தி, அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலரே’ என்று துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும், ‘வான்கலந்த மாணிக்க வாசக நின் ! வாசகத்தை நான் கலந்து பாடுங்கால், நற் கருப்பஞ் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’ என்று இராமலிங்க அடிகளாரும் வியந்து பாடியுள்ளார். இலங்கையிலிருந்து வந்த பௌத்தர்களை வாதில் வென்று சைவத்துக்கு வெற்றி தேடிக்கொடுத்தார் மாணிக்கவாசகர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமானின் திருப்புகழைப் பாடிக்கொண்டே பெண்கள் உந்தீ பறத்தல், தோணோக்கம் ஆடுதல், பூவல்லி கொய்தல், பொன்னூசல் ஆடுதல், அம்மானை விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை ஆடுவதைப்போல் பல இனிய பாடல்களை இவர் பாடியுள்ளார். திருவாசகத் தொகுப்பில் முதலிடம் பெற்றுள்ள ‘சிவபுராணம்’ என்னும் பாடலானது ‘நமச்சிவாய’ என்று தொடங்குகின்றது. இறுதியாக வைக்கப்பட்டுள்ள ‘முத்திநெறி யறியாத’ என்று தொடங்கும் பதிகத்தில் மாணிக்கவாசகர் ‘சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே !’ என்று வியந்து கூறுகின்றார். அவர் தாமே சிவம் ஆனதாக உள்ளது அவர் கூற்று. ஆன்மா சிவமாக மாறுவது என்னும் தத்துவம் சமய குரவர் ஏனைய மூவர் வாக்குகளில் காணப்படவில்லை. ‘நானே பிரமம்’ என்ற அத்துவித வேதாந்தக் கொள்கை மாணிக்கவாசகர் காலத்தில் தமிழகத்தில் சூறாவளியைப்போலச் சுழன்றடித்து வந்ததென்று தெரிகின்றது. இக் கொள்கைக்குத் தமிழகத்தில் மாயாவாதம் என்று பெயர் வழங்கி வந்தது. இவ் வத்துவிதக் கொள்கையை நாடு முழுவதிலும் பரவச் செய்தவர் ஆதிசங்கரராவார். மாணிக்கவாசகர் வாழ்ந்திருந்த காலத்தைப் பலர் பலவாறாக அறுதியிட்டுள்ளனர். இவர் தேவார ஆசிரியர் மூவர்க்கும் முந்தியவர் என்று சிலரும் பிந்தியவர் என்று சிலரும் கூறுவர். மறை |