| எனப் புராணங்கள் கூறுகின்றன. பெரும்பற்றப்புலியூர் நம்பி (கி.பி.13ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவிளையாடற் புராணத்திலும், பரஞ்சோதி முனிவர் (கி.பி. 17ஆம் நூற்றாண்டு) பாடிய திருவிளையாடற் புராணத்திலும், இவருக்குப் பிந்திய காலத்தவரான கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரர் புராணத்திலும், இப்பால் எழுந்த திருவுத்தரகோசமங்கைப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம் ஆகிய தலபுராணங்களிலும் மாணிக்கவாசகரின் வரலாறு விரிக்கப்படுகின்றது. மதுரையை அரசாண்டுவந்த பாண்டிய மன்னனிடம் இவர் அமைச்சராகப் பணியாற்றி வந்தார். அவனுக்காக இவர் குதிரைகள் வாங்கச் சென்றதும், சிவபெருமானின் திருவருள் நோக்கத்தைப் பெற்றதும், குதிரை வாங்க மன்னன் இவரிடம் ஒப்படைத்த பொருளைக் கொண்டு இவர் திருப்பெருந்துறையில் கோயில் ஒன்றை எழுப்பியதும், அதற்காகப் பாண்டியன் இவரை ஒறுத்ததும், சிவபெருமான் இவரை ஆட்கொண்டதும் இப்புராணங்களில் விளக்கமாக அறியலாம். மாணிக்கவாசகர் தம் அமைச்சுப் பதவியைத் துறந்து சிவவழிபாட்டில் ஆழ்ந்து திருவாசகப் பாடல்களையும், திருக்கோவையாரையும் பாடினார். சிதம்பரத்தில் திருச்சிற்றம்பலத்தில் நடம்புரியும் மெய்ப்பொருளே தம் பாடல்களின் உட்பொருள் என்று கூறித் திருச்சிற்றம்பலத்துக்குள் கலந்துவிட்டார் என்பது செவிவழிச் செய்தி. மாணிக்கவாசகரும் கன்னிப்பெண்கள் பாவை நோன்பு நோற்பதாகக் கருத்துட்கொண்டு திருவெம்பாவை என்னும் நூல் ஒன்று பாடியுள்ளார். இது இருபது பாடல்கள் கொண்டது. இப் பாடலுக்குப் பலர் பலவகையில் பொருள் கொள்ளுவர். நவசக்திகள் ஒருவரையொருவர் எழுப்புவதாகவும், சிறு பெண்கள் ஒருத்தியை ஒருத்தி அழைத்துக்கொண்டு சிவபெருமான் பேர் பாடிக் கொண்டு பாவை நோன்பு நோற்கச் செல்லுவதாகவும் இப்பாடல்கள் அமைந்துள்ளன என்று சிலர் மாறுபட்டுக் கூறுகின்றார்கள். திருவெம்பாவைப் பாடல்களில் கிடைக்கும் அகச் சான்றுகளைக் கொண்டு ஆயும்போது, கோயில் பிணாப் பெண்கள் (அதாவது கோயிற்பணிக்கு என விடப்பட்ட பதியிலார் பெண்கள்) ஒருத்தியை யொருத்தி வைகறையில் எழுப்பிக் கொண்டு சிற்றம்பலவன் சீர்பாடி நீர்த் துறையில் நீராடிப் பாவை நோன்பு நோற்றனர் என்று கொள்ளுவதே சாலப் பொருத்தமானதாகத் தோன்றுகின்றது. திருவாசகப் பாடல்கள் மிகவும் இனிமையானவை ; கன்னெஞ்சையும் கரைத்து நெகிழத்து உருக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. |