பக்கம் எண் :

234தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

மலையரையன், குணபரன் என்ற மன்னர்களின் பெயர்கள் பிரபந்தப்
பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

     நம்மாழ்வாருடைய பாசுரங்கள் வைணவர்களுடைய ஈடுபாட்டை மிகவும்
பெற்றுள்ளன. உபநிடதங்களின் கருத்துகள் யாவும் நம்மாழ்வாரின்
திருவாய்மொழியில் அடங்கியிருப்பதாக வைணவர்கள் போற்றிப்
பரவுகின்றனர். நம்மாழ்வார் வேளாளராயினும் அவருக்கு மதுரகவி என்பார்
தலைசிறந்த சீடராக அமர்ந்தார். மதுரகவி யாழ்வார் ஓர் அந்தணர். பன்னிரு
ஆழ்வார்களுள் இவரும் ஒருவர்.

     ஆண்டாள் நாச்சியார் இளம் வயதிலேயே திருவரங்கத்துக் கண்ணன்
மேல் ஆராத காதல் கொண்டு பல அகத்துறைப் பாடல்கள் பாடியுள்ளார்.
அக் காதல் முதிர்ந்து திருவரங்கம் கோயில் கருவறைக்குள் மணப்பெண்
கோலத்துடன் நுழைந்து கண்ணபெருமானுடன் கலந்துவிட்டனள் எனக்
கூறுவர். இவர் பாடிய ‘வாரணமாயிரம்’ என்னும் பாசுரம் தரும்
குறிப்புகளிலிருந்து இவர் காலத்திய மணவினை நடைமுறைகளையறிந்து
கொள்ளலாம். ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின்
வளர்ப்பு மகளாக வளர்ந்து கோதை என்னும் பெயர் பூண்டு, தம்மை
முற்காலத்திய கோபிகைப் பெண்களுள் ஒருத்தியாகவே கருதிக்
கண்ணனையடைய நோன்பு நோற்றவர். ஆயர்பாடி இளம் கன்னிப் பெண்கள்
மார்கழி மாதம் விடியற்காலையில் ஒருத்தியையொருத்தி எழுப்பிப் பாவை
நோன்பு நோற்றுக் கண்ணனையடைந்த பேரின்பத்தைத் திருப்பாவைப்
பாடல்களில் இவர் பாடியுள்ளார். முப்பது பாடல்கள் கொண்டது இத்
திருப்பாவை. வைணவர்கள் இப் பாடல்களை மார்கழி மாதங்களில் நாடோறும்
வைகறையில் பாராயணம் செய்து வருகின்றனர்.

மாணிக்கவாசகர்

     சைவ சமய குரவருள் நான்காமவராக வைத்துப் போற்றப்படுபவர்
மாணிக்கவாசகர். இவர் பாடிய பாடல்களுக்குத் ‘திருவாசகம்’ என்பது பெயர்.
திருக்கோவையார் என்னும் அகத்துறை நூல் ஒன்று சிதம்பரம்
நடராசரின்மேல் பாடியுள்ளார். திருவாசகமும் திருக்கோவையாரும் சைவத்
திருமுறைகள் பன்னிரண்டுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்
பெற்றுள்ளன. மாணிக்கவாசகரின் பிள்ளைப் பெயர் திருவாதவூரர் என்பது.
அவருடைய பாடல்களைக் கேட்டுமகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு
மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டினார்