மேல் படைசெலுத்தி வந்து இராமேசுவரம் வரையில் முன்னேறினான். ஆடுதுறைக் கோயில் சிலைகளைக் கைப்பற்றி ஹலேபீடு என்ற ஊருக்கு எடுத்துச் செல்ல முயன்றான்; ஆனால், அம் முயற்சி வெற்றி பெறவில்லை. இந் நிலையில் ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கியைக் கைப்பற்றிக் (கி.பி. 1118) குலோத்துங்கன்மேல் தன் பரம்பரை வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான். அவனுடைய வாணாள் வரையில் வேங்கி அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாடாகவே இருந்து வந்தது. சோழரின் மேலாட்சியிலிருந்து கீழைச் சளுக்க நாட்டைப் பிரித்து வைக்க வேண்டுமென்பதையே அவன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். அந் நோக்கம் நிறைவுபெற்றதும் அவனுடைய இதயமும் அமைதி அடைந்தது. ஆனால், குலோத்துங்கனின் மன நிறைவு குலைந்தது. அவன் முனைப்புற்று எழுந்தான்; மேலைச் சளுக்கர்மேல் பாய்ந்தான். வேங்கியையும், கங்கபாடியின் சில பகுதிகளையும் மீட்டுக்கொண்டான். வேங்கியைத் தன் நாட்டின் மாகாணங்களுள் ஒன்றாக மாற்றி இணைத்துக் கொண்டான். குலோத்துங்கனின் பல விருதுகளையும், சிறப்புப் பெயர்களையும் பூண்டிருந்தான். அவனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டு வரையில் அவன் பெயர் இராசேந்திரன் என்றே வழங்கி வந்தது. இராச கேசரி, பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி, சர்வலோகாசிரயன், விஷ்ணுவர்த்தனன், பராந்தகன், பெருமானடிகள், விக்கிரம சோழன், குலசேகர பாண்டிய குலாந்தகன் என்ற விருதுகள் அவன் பெயரை அணி செய்ததைக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. விருதராச பயங்கரன், அகளங்கன், அபயன், சயதரன் என்னும் விருதுகளையும் அவன் புனைந்திருந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தவன் என்று சில கல்வெட்டுகள் அவனைப் பாராட்டுகின்றன. அவன் மேற்கொண்டு செய்த அரசியல் சீர்திருத்தங்கள் யாவை, எந்தச் சுங்கங்களை அவன் தவிர்த்தவன் என்ற விளக்கங்கள் கிடைக்கவில்லை. சோழநாடு முழுவதிலும் அவன் கி.பி. 1086-ல் நில அளவை ஒன்றைச் செய்து முடித்தான். இதே ஆண்டில் இங்கிலாந்தின் நிலங்கள், உழவரின் உடைமைகள் ஆகியவற்றின் விரிவான கணக்கீடு ஒன்று செய்யப்பட்டது குறிப்பிடவேண்டிய நிகழ்ச்சியாகும். |