பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 293

இடமேற்படுகின்றது. குலோத்துங்கன் கொலுவில் ஆடல் பாடல் மகளிர், சூதர்
(நின்று புகழ்வோர்), மாகதர் (இருந்து ஏத்துவோர்), மங்கலப் பாடகர்கள்
ஆகியோர் குழுமியிருந்தனர். இசைவிருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பலநாட்டு அரசிகள் பணிவிடை செய்து நின்றனர். வடகலிங்க மன்னன் மேல்
படையெடுத்துச் சென்று வெற்றிபெற்று வருவதாகக் கூறிக் கருணாகரத்
தொண்டைமான் என்ற வண்டை நகரத்துக் குறுநில மன்னன் வீறுகொண்டு
எழுந்தான். அவன் தலைமையில் மாபெரும் படையொன்று திரண்டது.
இப்படையில் யானைகள், குதிரைகள், தேர்கள், காலாள்கள் ஆகிய
நாற்பிரிவும் அடங்கியிருந்தன. பாலாறு, குசத்தலையாறு, பொன்முகரி, கொல்லி,
வடபெண்ணை, மண்ணாறு, குன்றியாறு, கிருஷ்ணை, கோதாவரி, பம்பை,
காயத்திரி, கோதமை ஆறுகள் எல்லாவற்றையும் அப் படை கடந்து சென்று
கலிங்கத்தின்மேல் போர்தொடுத்தது (கி.பி. 1110). சோழர்களின் தாக்குதலை
எதிர்த்து நிற்கமாட்டாதவனாய்க் கலிங்க மன்னன் அநந்தவர்மன் ஓடி
ஒளிந்தான். கலிங்கர் மாற்றுருக்கொண்டு போர்க்களத்தினின்றும் தப்பி
யோடினர். சோழர்கள் போர்க்களத்தில் ஆயிரம் யானைகளுக்கு மேல்
கொன்று குவித்தனர்; அளவற்ற செல்வத்தையும், குதிரைகளையும்,
யானைகளையும், ஒட்டகங்களையும், மகளிரையும் கலிங்கரிடமிருந்து
கைப்பற்றிச் சென்றனர்.

    கலிங்க மன்னனின் செருக்கை ஒடுக்கிவிட்டுக் கருணாகரத்
தொண்டைமான் வெற்றி முழக்கத்துடன் நாடு திரும்பி வந்து
மன்னனிடமிருந்து மாபெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றான்.
ஆனால், கலிங்க நாட்டின் ஒரு சிறு பகுதியேனும் சோழப் பேரரசுடன்
இணைக்கப் பெறவில்லை.

    கன்னோசி மன்னர் காடவாலருடன் நட்புறவு பூண்டிருந்தனர் என்று
குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1111) கூறுகின்றது. சோழப் பேரரசு
விரிவடைந்துகொண்டிருந்தது. சிங்களம் ஒன்று மட்டும் சுதந்தரம்
பெற்றிருந்தது. சோழப் பேரரசின் ஆதிக்கம் கி.பி. 1115ஆம் ஆண்டளவில் மிக
உயர்ந்த நிலையை எட்டியிருந்தது. ஆனால், அடுத்து இரண்டு
மூன்றாண்டுகளில் கங்கபாடியும், வேங்கி மாகாணங்களும் சோழரின்
பிடியிலிருந்து நழுவிவிட்டன. விஷ்ணுவர்த்தனன் என்ற போசள மன்னன்
கங்கபாடியையும், நுளம்பபாடியையும் கைப்பற்றிக் கொண்டான். பிறகு அவன்
தழைக்காட்டையும் கைப்பற்றித் தனக்குத் தழைக்காடு கொண்டான் என்றொரு
விருதையும் சூட்டிக்கொண்டான். இப் போசள மன்னன் சோழநாட்டின்