பக்கம் எண் :

292தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

சைலேந்திர சூடாமணி விகாரை என்றொரு பெயரும் உண்டு. சுமத்திராத்
தீவில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டில் (சகம் 1010, கி.பி. 1088) திசையாயிரத்து
ஐந்நூற்றுவர் என்ற வாணிகச் சங்கம் ஒன்று சோழநாட்டில் நடைபெற்று
வந்ததாகக் குறிப்புக் காணப்படுகின்றது.

    சோழரை எதிர்த்து வேணாட்டில் ஒரு கிளர்ச்சி மூண்டெழுந்தது.
குலோத்துங்கனின் புகழ்பெற்ற படைத் தலைவர்களுள் ஒருவனான நரலோக
வீரன் என்பான் வேணாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அக்
கிளர்ச்சியை உடனுக்குடனே அடக்கிவிட்டான் (கி.பி. 1098).

    குலோத்துங்கன் இருமுறை கலிங்கத்தின்மேல் படையெடுத்தான். தென்
கலிங்கமானது வேங்கி நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகச் சளுக்கர்
ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அங்குப் பெயரிதொரு கலகம் ஏற்பட்டது.
குலோத்துங்கன் படையொன்றை அனுப்பி அக் கலகத்தை அடக்கினான் (கி.பி.
1096). இரண்டாம் படையெடுப்புதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்
படையெடுப்பின்போது குலோத்துங்கனுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைப்
பாராட்டிச் செயங்கொண்டார் என்ற புலவர் பரணி ஒன்று பாடினார். அந்
நூலுக்குக் கலிங்கத்துப் பரணி என்று பெயர். சொற்கட்டிலும்,
பொருளாழத்திலும், பல்வேறு இலக்கியச் சுவைகளிலும், மெய்ப்பாடுகளிலும்
இணையற்று விளங்குவது இந் நூல். இரண்டு அடிகள் கொண்டுள்ள தாழிசை
என்னும் செய்யுளில் இந் நூல் முழுதும் யாக்கப்பட்டுள்ளது. வடகலிங்க
வேந்தன் தனக்குத் திறை செலுத்தத் தவறினான் என்ற காரணத்துக்காக
முதலாம் குலோத்துங்கன் வெகுண்டெழுந்து கலிங்கத்தின்மேல் போர்
தொடுத்தான் என்று கலிங்கத்துப் பரணி இயம்புகின்றது. அப்போது
அரசாண்டு வந்த வடகலிங்க வேந்தன் கலிங்க நகரத்து அநந்தவர்மன்
சோடகங்கன் ஆவான் (கி.பி. 1078-1150). இவன் சோழ நாட்டு இளவரசி
இராசசுந்தரி என்பவளின் மகன்.

    காஞ்சிமா நகரின் தென்மேற்குத் திசையில் நின்ற பொன் மாளிகைச்
சித்திரமண்டபத்தில் உள்ள அரியணைமேல் குலோத்துங்கன்
அமர்ந்திருந்தான். அவனுடைய அரசிகள் தியாகவல்லியும், ஏழிசைவல்லபியும்
உடன் அமர்ந்திருந்தனர். குலோத்துங்கனின் மற்றொரு மனைவியான
மதுராந்தகியின் பெயர் கலிங்கத்துப் பரணியில் காணப்படவில்லை. எனவே,
கலிங்கப் போருக்கு முன்னரே அவள் காலமாகிவிட்டிருக்க வேண்டும் என்று
ஊகிக்க