பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 291

தான் மணம் புரிந்துகொண்டான். லீலாவதியின் தாய் முன்னொரு காலத்தில்
சோழநாட்டுச் சிறையினின்றும் தப்பி யோடியவள். மற்றும், கலிங்கத்து
இளவரசி திரிலோகசுந்தரியையும் விசயபாகு மணந்தான். தன் தங்கை மித்தை
என்பவளைப் பாண்டிநாட்டு இளவரசன் ஒருவனுக்கு மணம் புரிவித்தான்.
இவனுடைய பேரனான சிங்கள மன்னன், மகாபாராக்கிரம பாகு என்பவன்.

    சிங்களம் தன்னுரிமை எய்தியது சோழர்கட்குப் பெரும் இழப்பு என்று
கூறமுடியாது. சோழநாட்டுக்குச் சிங்களம் எவ்விதமான ஊறுபாடும் செய்யும்
நிலைமையில் இல்லை. சோழர்களின் கை உள்நாட்டு அரசியலில் ஓங்கி
நிற்கும் வரையில் சிங்களவர்கள் அவர்களை ஒன்றும் இடர்ப்படுத்த முடியாது.
ஆனால், என்றுமே பாண்டி நாட்டை ஒடுக்கித் தன் ஆட்சியின்கீழ்
வைத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஒன்று உண்டு என்று
குலோத்துங்கன் நன்கு உணர்வான். பாண்டிநாடு தலை தூக்கினால் சோழரின்
ஆட்சிக்கு இடும்பைகள் நேரிடக்கூடும் என்ற நிலையைச் சோழ மன்னன்
அளந்து வைத்திருந்தான். எனவே, பாண்டி நாட்டையும் கேரளத்தையும்
அடக்கித் தனக்கு அடிமையாக்கிக் கொள்ளும் செயல்களில் குலோத்துங்கன்
முனைப்புடன் இறங்கினான். அவ்விரு நாடுகளிலும் பல்வேறு கிளர்ச்சிகள்
மூண்டெழுந்தன. அவற்றைத் திறம்பட ஒடுக்கினான். ஆங்காங்குத் தன்
ஆணையை நிறைவேற்றி வைப்பதற்கென நிலப்படைகளை நிறுத்திவைத்தான்.
ஆனால், பாண்டி நாட்டிலும், கேரள நாட்டிலும் வழக்கில் இருந்துவந்த
ஆட்சிமுறைகளில் இவன் தலையிடவில்லை.

    குலோத்துங்க சோழன் கடாரத்தையும் வென்றதாக அவனுடைய
மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன. ஆனாலும், கி.பி. 1099-ல் கடாரத்து வேந்தன்
ஒருவனிடமிருந்து இராச வித்யாதர ஸ்ரீ சாமந்தனும், அபிமானோத்துங்க
ஸ்ரீசாமந்தனும் தூது வந்தனர் எனவும், அம் மன்னனின் விருப்பப்படியே,
குலோத்துங்கன் நாகப்பட்டினத்தில் நடைபெற்றுவந்த பௌத்த விகாரைகட்கு
ஏற்கெனவே கொடையாக அளிக்கப்பட்டிருந்த கிராமத்தை இறையிலிக்
கிராமமாக மாற்றிக்கொடுத்தான் எனவும் அறிகின்றோம். அக்காலத்தில்
நாகப்பட்டினத்துக்குச் சோழ குல வல்லப பட்டினம் என்றொரு பெயர்
வழங்கிவந்தது. மேற்கூறப்பட்ட இரண்டு விகாரைகட்கும் ‘இராசேந்திரப்
பெரும்பள்ளி’ யென்றும் ‘இராசராசப் பெரும்பள்ளி’ என்றும் பெயர்கள்
வழங்கின. இராசராசப் பெரும்பள்ளிக்கு ஸ்ரீ