முதலாம் குலோத்துங்கன் இருவழியில் இராசராச சோழனின் கொள்ளுப் பேரனாவான். இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்காதேவியின் மகன் இவன். இவனுடைய தந்தை கீழைச் சளுக்க மன்னன் முதலாம் இராசராசன். இவன் வேங்கி நாட்டு விமலாதித்தனுக்கும் முதலாம் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவன். குலோத்துங்கன் உடலில் பெருமளவு ஓடியது சோழர் குலக் குருதி தான். சளுக்க மன்னன் முதலாம் இராசராசன் கி.பி. 1060-ல் காலமானான். பிறகு பத்தாண்டுகள்வரை இரண்டாம் இராசேந்திரன் என்ற பெயரில் குலோத்துங்கன் வேங்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். அப்படி ஆண்டுவந்த காலத்தில் பஸ்தார் நாட்டுக் குறுநில மன்னர் சிலரைப் போரில் வென்று அவர்களை ஒடுக்கி வைத்தான். ஆறாம் விக்கிரமாதித்தனுடனும் இவன் போரிட்டு வெற்றி கண்டான். மேலைச் சளுக்கரின் ஆதிக்க விரிவை எதிர்த்துப் போராடிய முதலாம் வீரராசேந்திரனுக்குத் துணை நின்று வேங்கி நாட்டின்மேல் சோழரின் அரசியல் செல்வாக்கு நிலைத்து நிற்பதற்கு வேண்டிய உதவிகளையும் குலோத்துங்கன் புரிந்து வந்தான். குலோத்துங்கன் பிறந்தவுடனே கங்கைகொண்ட சோழனின் தேவியான இவன் பாட்டியார் இவனைத் தன் இரு கைகளாலும் வாரியெடுத்து, இவனுடைய உடற்குறிகள் சிலவற்றை உற்று நோக்கி இவன் சூரிய குலத்துக்கு அரசனாவான் எனக் கூறி மகிழ்ந்தாள் என்று கலிங்கத்துப் பரணி ஆசிரியர் செயங்கொண்டார் கூறுகின்றார்.16 முதலாம் குலோத்துங்கன் சோழநாட்டு அரியணை ஏறிய சில ஆண்டுகட்குள் காலசூரி மன்னன் யசகர்ணன் என்பான் வேங்கி நாட்டின்மேல் படையெடுத்தான்; ஆனால், வெற்றி காணாதவனாய்ப் புறமுதுகிட்டு ஓடிவிட்டான் (கி.பி. 1073). குலோத்துங்க சோழன் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பு சோழ நாட்டில் ஏற்பட்ட கலவரங்களின்போது சிங்கள நாட்டில் விசயபாகு (கி.பி. 1055-1110) என்பான் பொலன்னருவையைக் கைப்பற்றித் (கி.பி. (1070) தானே சிங்களத்து மன்னனாகப் பட்டங்கட்டிக் கொண்டான் (கி.பி. 1076-7). பொலன்னருவைக்கு விசயராசபுரம் என்று மாற்றுப் பெயர் சூட்டினான். அயல்நாட்டு மன்னருடன் திருமண உறவுகளை மேற்கொண்டான். கன்னோசி மன்னன் ஜகதிபாலனின் மகள் லீலாவதியைத் 16. கலிங், 237. |