பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 289

அவன் வெற்றிகளை எடுத்துக்காட்டுகின்றன. தில்லைச் சிற்றம்பலத்து
நடனமாடுங் கடவுளின் மணிமுடியை அணி செய்ய ‘திரைலோக்கிய சாரம்’
என்ற விலை மதிப்பற்ற மாணிக்கமணி ஒன்றை அவன் வழங்கினான்.15
சோழநாடு, தொண்டை நாடு, பாண்டி நாடு, கங்கபாடி ஆகிய நாடுகளில்
அவன் பல பிரமதேயகங்களை நிறுவினான். வீரராசேந்திரன் வெற்றி
முழக்கத்துடன் சோழநாடு திரும்பிக் கங்கைகொண்ட சோழபுரத்தில்
எழுப்பப்பட்டிருந்த ‘சோழ கேரள மாளிகை’யில் அமர்ந்து ‘இராசேந்திர
சோழமாவலி வாணராசன்’ என்ற அரியணை மேல் கொலுவீற்றிருந்து
வெற்றிவிழாக் கொண்டாடினான். அவன் கி.பி. 1070-ல் இவ்வுலகை நீத்தான்.
அவனுடைய மகனும், சளுக்க மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனின்
மைத்துனனுமான அதிராசேந்திர தேவன் அரசுகட்டில் ஏறினான்.
வீரராசேந்திரனின் அரசியருள் ஒருத்தியின் பெயர் அருண்மொழி நங்கை.
அவனுடைய காலத்தில் வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூல் ஒன்றைப்
புத்தமித்திரர் என்பார் இயற்றினார். தமிழ்வளர்ச்சிப் பணிகள் வீரராசேந்திரன்
காலத்தும் தொடர்ந்து நடைபெற்று வந்ததென இதனால் அறிகின்றோம்.

    அதிராசேந்திரன் தான் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பு தன்
தந்தையுடன் அமர்ந்திருந்து ஆட்சி நடத்தி வந்தான். அரியணை ஏறிய பின்பு
ஒருமாத காலமே இவன் ஆட்சி புரிந்தான். விசயாலய சோழனின் நேர்
பரம்பரை இவனுடைய வாணாளுடன் முடிவடைந்தது.

முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120)

    வீரராசேந்திரன் கண்களை மூடியவுடன் சோழ நாட்டில் அரசுரிமைக்
கிளர்ச்சிகள் சில நடைபெற்றன. ஒரு கிளர்ச்சியின்போது அதிராசேந்திரன்
மாண்டு போனான். இவனையடுத்து முதலாம் குலோத்துங்கன் பட்டத்துக்கு
வந்தான். வைணவ சைவ வரலாறுகளில் வரும் கிருமிகண்ட சோழன்
என்பவன் அதிராசேந்திரனே எனச் சிலர் கூறுவர். வைணவ சமய
ஆசாரியருள் ஒருவரான இராமானுசரை நாட்டைவிட்டு ஓட்டியவனும் இவனே
என்று சிலர் கூறுகின்றனர். முதலாம் வீரராசேந்திரனோ அன்றி, முதலாம்
குலோத்துங்கனோ இராமானுசரை வெருட்டியவன் என்றும் ஐயப்படுகின்றனர்.

    15. Ep. Ind. XVII. 54.