பக்கம் எண் :

364தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

சிவன் கோயில்களில் சங்கராந்தி, தைப்பூசம், சிவராத்திரி, சித்திரை விஷு,
உத்தராயணம், ஐப்பசி விஷு , கார்த்திகைத் திருநாள் ஆகிய நன்னாள்
களிலும்180 கிரகணங்கள் நிகழ்ந்த நாள்களிலும் விழாக்கள் எடுக்கப்பட்டன.
திருக்காளத்தியில் முதலாம் பராந்தகன் காலத்தில் இந்திர விழா181
எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். வைணவக் கோயில்களில் உறியடி
விழாவும், திருப்பள்ளியறை நாச்சியாருக்கு (ஆண்டாளுக்கு) ஆடித் திருப்பூர
நோன்பும்,182 சங்கராந்தியும் கொண்டாடப்பட்டன.

     நவக்கிரக வழிபாடு தமிழகமெங்கணும் பரவியிருந்தது. சூரியனுக்குத்
தனிக் கோயில்கள் எழுப்பப்பட்டன. சூரியனார் கோயில் என்னும் ஊரில்
கோயில் கொண்டுள்ள சூரியனுக்கு முதலாம் குலோத்துங்கன் வழிபாடுகள்
ஏற்பாடு செய்தான்.183 சூரிய தேவனுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும்
இருக்கு வேதத்திலிருந்து சௌரம் ஓதுவதற்காக முதலாம் இராசேந்திரன்
திருநாமநல்லூரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவினான்.184 சைவத்தில்
தமிழ்மறை எனப்படும் தேவாரத் திருப்பாட்டின் ஆசிரியரான சுந்தரருக்கு
முன்பு வடமொழி வேதபாராயணம் செய்ய அறக்கட்டளை பிறந்தது
குறிப்பிடத் தக்கதாகும்.

வேண்டுதல்

     தம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்று சுவாமியின்
முன்பு பிரார்த்தனை செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும்
வழக்கம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றது. காணாமற்போன
நல்லமங்கை என்ற தன் மகள் கிடைத்துவிட்டதற்காகக் கூத்தன் என்ற
பொற்கொல்லன் ஒருவன் சுவாமிக்கு நெற்றிப்பட்டம் ஒன்று செய்து
கொடுத்தான்.

இலக்கியம்

     இப்போது வழக்கில் இல்லாத நூல்கள் சிலவற்றின் பெயர்கள்
கல்வெட்டுச் செய்திகளில் வெளியாகியுள்ளன. ‘சைவநெறி கண்ட
அரும்பாக்கத்து அறநிலை விசாகன் திரைலோக்கியமல்லன் வச்சராசன்’
என்பான் ஒருவன் பாரதத்தை எழில்மிக்க தமிழில் மொழிபெயர்த்தான் என்று
மூன்றாங் குலோத்துங்கன் காலத்துத்

     180. S. I. I. V. No. 578.
     181. S. I. I. VII. No. 529.
     182. S. I. I. V. No. 277.
     183. Ep. Rep. 22/27; S. I. I. V. No. 277.
     184. Ep. Rep. 225/39.