பக்கம் எண் :

சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் 365

திருவாலங்காட்டுக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. ‘குலோத்துங்க சோழன்
சரிதை’ என்ற நூல் ஒன்றை மானகுலாசனிச் சேரியைச் சேர்ந்தவனான
‘திருநாராயண பட்டன் என்கிற கவி குமுதசந்திரபண்டிதன்’ என்பான்
இயற்றினான். முதலாம் குலோத்துங்கன் ஆணையின்மேல் வீரநாராயண
விண்ணகர் ஆழ்வார் கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட மிகப் பெரியதொரு
மேடையின்மேல் அந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதன்
ஆசிரியருக்கு நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன.185 புலவன் ஒருவன்
ஒரு குறுநில மன்னன்மேல் பிள்ளைக்கவி பாடிப் பரிசில்பெற்றான்.186
முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே கன்னிவன புராணம் என்ற ஒரு
நூலையும், நாடகம் ஒன்றையும் கமலாலயப்பட்டன் என்ற ஒரு புலவன்
இயற்றிப் பரிசில்கள் பெற்றான்.187 மேலே குறிக்கப்பட்ட நூல்கள் யாவும்
இப்போது மறைந்தொழிந்தன.

     சோழர் காலத்தில் தமிழ் வளர்ச்சியானது மிக உயர்நிலையை எட்டி
இருந்தது. பல அரிய நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றின் சீரும் சிறப்பும்
இன்றளவும் மங்காமல் ஒளிர்ந்து வருகின்றன. கல்லாடனார் இயற்றிய
கல்லாடம் என்னும் அகத்துறை நூல் ஒன்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் உள்ள செய்யுள்களுள் ஒரு நூற்றை
அடிப்படையாகக் கொண்டு நூறு அகவற்பாக்களால் ஆக்கப்பட்டது இந்நூல்.
வழக்கொழிந்த சங்கப் பாடல்களின் போக்கிலேயே இந்நூலின் பாட்டுகள்
யாக்கப்பட்டுள்ளன. இக் கல்லாடனார் சங்க காலத்துக் கல்லாடனாரினின்றும்
வேறானவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்று கொள்ளத்தகும்.
பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருக்கண்ணப்பதேவர்
திருமறம் என்னும் நூலையும் இவரே பாடினார் என்பர். முதலாம்
குலோத்துங்கன் காலத்தவரான செயங்கொண்டார் என்பவர் கலிங்கத்துப்
பரணி என்னும் நூலைப் பாடினார். போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று
வெற்றிகண்ட மன்னனின் புகழைப் பாடுவது பரணி என்பதாகும். பரணி
பாடுவது எளிதன்று. ‘பரணிக்குச் செயங்கொண்டார்’ என்று இலக்கிய உலகம்
இப் புலவர் பெருமகனைப் பாராட்டி வருகின்றது. சோழ மன்னரின் இராச
பாரம்பரியத்தைப் பற்றிப் பல செய்திகளை இது கொண்டுள்ளது.
குலோத்துங்கன் கலிங்கத்துப் போரைப் பற்றிப் பரவுவது இந்நூல். இது
வரலாற்றுச் சிறப்புடையதாகும். இது தாழிசை என்னும் செய்யுள்களால்
அமைந்துள்ளது. பாட்டுகள் சொல்லினிமையையும்,

     185. Ep. Rep. 198/19.
     186. Ep. Rep. 71-73 & 25-24.
     187. S. I. I. V. No. 753.