பக்கம் எண் :

366தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

இசையையும், பல்வேறு சந்தங்களையும், சிதைவுறாத முழுச்
சொற்கோவையையும் கொண்டு மிளிர்கின்றன. வீரம் மட்டுமன்றி
நகைச்சுவையும் இந் நூலில் பொலிவதைக் காணலாம். ‘கடை திறப்பு’, ‘கூழ்
அடுதல்’ என்னும் பகுதிகள் தமிழ் இலக்கியத்தில் ஈடிணையற்ற படைப்புகளாக
இருக்கின்றன. ‘முருகிச் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர் செம்பொற் கபாடம் திறமினோ’ என்னும்
பாடலும்,188 ‘உயிரைக் கொல்லாச் சமண்பேய்கள் ஒரு போழ்து உண்ணும்,
அவை உண்ண மயிரைப் பார்த்து நிணத்துகிலால் வடித்துக் கூழை வாரீரே’
என்னும் பாடலும்,189 ‘அவதியில்லாச் சுவைக் கூழ்கண்டு அங்காந்து
அங்காந்து அடிக்கடியும் ‘பவதி பிட்சாந்தேஹீ’ எனும் பனவப் (பார்ப்பன)
பேய்க்கு வாரீரே’ என்னும் பாடலும்190 படிப்பவர் முகத்தில் புன்னகையை
வருவிக்கும் நகைச்சுவையைக் கொண்டுள்ளன. கலிங்கத்துப் போரைப்பற்றிப்
புகழ்ந்து பேசும் பல பாடல்கள் வீரசோழியம், தண்டியலங்காரம்
ஆகியவற்றின் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்டுள்ளன.

     சோழ மன்னரின் ஆட்சிக் காலத்துக்கே பெருமையையும் புகழையும்
ஈட்டித் தந்தவர்கள் ஒட்டக்கூத்தர், கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகிய
மாபெரும் புலவர்கள் ஆவர். ஒட்டக்கூத்தரும் கம்பரும் உடன்காலத்தவர்கள்
என்றும், அவர்களுக்குள் புலமைக் காய்ச்சல் புகைந்துகொண்டே இருந்தது
என்றும் பல செவிவழி வரலாறுகள் உண்டு. ஒட்டக்கூத்தர் தம்மைப்
புரந்துவந்தவனான காங்கேயன் என்ற குறுநில மன்னன்மேல் நாலாயிரக்
கோவை என்னும் நூல் ஒன்றைப் பாடியுள்ளார். மூவருலா என்னும் நூலை
எழுதியவரும் அப் புலவரேயாவார். விக்கிரம சோழனின் கலிங்கத்துப்
போரைப் பாராட்டிப் பரணியொன்றும் இவர் பாடினார். அன்றியும்
தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், ஈட்டி எழுபது,
எழுப்பெழுது, சரசுவதியந்தாதி, அரும்பைத் தொள்ளாயிரம் ஆகிய
நூல்களையும் இவர் பாடியுள்ளார். இராமாயணத்தின் உத்தர காண்டத்தைப்
பாடியவர் ஒட்டக்கூத்தரே என்று கூறுவர். உத்தரகாண்டம் உட்படக்
கம்பராமாயணம் 12,016 பாடல்களைக் கொண்டுள்ளது.

     கல்வியிலும், கவித்திறனிலும், கற்பனை வளத்திலும், கருத்து
ஆழத்திலும், சொல்லாட்சியிலும் ஒட்டக்கூத்தரை மிஞ்சியவர் கம்பர். கம்பர்
இயற்றிய இராமாயணம் தமிழிலக்கியத்துக்கு மணிமுடியாக அமைந்துள்ளது ;
அக் காலத்தை வென்று என்றும் சீரிளமை குன்றாது ஒளிர்ந்து வருகின்றது.

     188. கலிங்.50
     189. கலிங். 556.
     190. கலிங். 563.