| கம்பர் வான்மீகி முனிவரின் வடமொழி இராமாயணத்தை முதல் நூலாகக் கொண்டு தம் நூலை இயற்றினார். என்பது மரபாக உள்ளது. ஆனால், கதையின் அமைப்பிலும், போக்கிலும் கதைப் பாத்திரங்களின் அமைப்பிலும், கம்பர் தமிழ்மரபுக்கேற்பத் தம் நூலில் பல மாறுதல்களைச் செய்துள்ளார். வான்மீகி முனிவர் இராமனை ஓர் அரசகுமாரனாகவே தீட்டியிருக்கின்றார். கம்பர் இராமனைத் திருமாலின் அவதாரமாகவே கொண்டு தம் கதையை நடத்துகின்றார். இராவணன் சீதையைத் தன் கைகளால் மார்புற அணைத்துத் தூக்கிக் கொண்டு போனான் என்று வான்மீகி கூறுகின்றார். ஆனால், கம்பரின் தமிழ் உள்ளம் அப்படி கூற ஒப்பவில்லை. உலகம் ஈன்ற தாயான சீதாப் பிராட்டியைப் பிறன் ஒருவன் தீண்டினால் உயிர் வாழமாட்டாள் என்று எண்ணி இராவணன் அவள் நின்ற நிலத்தையே அகழ்ந்து தூக்கிக் கொண்டு போனான் என்று கம்பர் கூறுகின்றார். இதைப் போன்ற அடிப்படை மாறுதல்கள் பல செய்து தமிழரின் பண்பாட்டைத் தம் நூலில் பொதிந்து வைத்து அதற்குப் பாதுகாப்பிட்டார். தமிழ்மொழியானது கம்பரின் கைகளில் சொக்கத் தங்கத்தைப் போல இழுத்த இழுப்புக்கு வந்துள்ளது. கம்பர் தமக்கு விருப்பமான முறையில் எல்லாம் இலக்கண வரம்பை மீறியும் எழுத்தாட்சியும் சொல்லாட்சியும் மாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றலையும் அதிகாரத்தையும் பெற்றிருந்தார். அதனால், கவிச்சக்கரவர்த்தி என்ற ஒரு பாராட்டும் கிடைத்தது. கம்பரின் கவிகள் சொல்லாழம் உடையன ; பொருள்நயம் வாய்ந்தன. கம்பரின் கவிகளில் பொருள்நயங் காண்டலையே ஒரு பெருங்கலையாகத் தமிழ்ப் புலவர்கள் கருதுவர். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்று ஒரு பழமொழி வழங்குகின்றது. அது கம்பரின் இலக்கியச் செறிவையும், அவரை யண்டினவரையும் கவிகளாக்கிவிடக்கூடிய தமிழாற்றலையும் எடுத்துக் காட்டு கின்றது. கற்பனைத் திறனில் கம்பரை மிஞ்சிய தமிழ்ப்புலவர்கள் தமிழக வரலாற்றிலேயே முன்னும் பின்னும் பிறக்கவில்லை. மக்கள் உள்ளங்களின் கூறுபாட்டையும், எழுச்சிகளையும், வேட்கைகளையும் நன்கு ஆய்ந்துணர்ந்தவர் கம்பர். கம்பரைப் பற்றிய வரலாறுகள் பல வழங்கி வருகின்றன. அவற்றை உண்மை என்று கூறுவதற்கோ, பொய்யென்று கூறுவதற்கோ போதிய சான்றுகள் இல. கம்பர் தேரழுந்தூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், சடையப்ப வள்ளல் என்பவரால் புரக்கப்பட்டவர் என்றும் தெரிகின்றது. திருக்கோடிக்கா கல்வெட்டு ஒன்று சடையப்ப வள்ளலைப் பற்றிய செய்தி ஒன்றைக் கூறுகின்றது. அவன் சேதிபன் என்றும், பிள்ளைப் பெருமாள் |