| என்பவனின் மகன் என்றும், புலவரையும் வறியோரையும் புரந்த பெரிய வள்ளல் என்றும், அவன் இவ் வுலகத்தையே தரப்பெற்றாலும் பொய் மொழியான் என்றும் அது கூறுகின்றது.191 அக் கல்வெட்டு முதலாம் குலோத்துங்கன் (1070-1120) காலத்தியதாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சடையப்ப வள்ளலே கம்பரின் புரவலன் என்று கொள்ள வேண்டும். கம்பர் இராமாயணத்தின் முதல் ஆறு காண்டங்களை மட்டும் பாடினார் என்றும், ஏழாங் காண்டம் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டதென்றும் கூறுவர். கம்பர் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை. எனினும், சில அகச்சான்றுகளைக் கொண்டு கம்பர் மூன்றாம் குலோத்துங்கன் (1178-1216) காலத்தவர் என்றும், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியவர்களுடைய முதுமைக் காலத்தில் உடன்வாழ்ந்தவர் என்றும் சில ஆய்வாளர்கள் முடிவு கட்டியுள்ளனர். சீவகசிந்தாமணியின் மொழி வளத்தையும், கற்பனைத்திறத்தையும் கம்பரின் ஒப்பற்ற படைப்பில் காணலாம். கம்பர் ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை ஆகிய நூல்களையும் இயற்றினார் எனக் கொள்ளுவர். அந்தாதியும் மும்மணிக் கோவையும் இப்போது மறைந்து போய் விட்டன ; வழக்கில் இல்லை. அவ்வையார் கம்பரின் உடன்காலத்தவராக அவ்வையார் என்றொரு பெண்பாற் புலவர் இருந்தார் என அறிகின்றோம். இவருடைய கல்வியறிவு கம்பரின் கல்வியறிவைவிடச் சிறந்ததென்றும், இவர் கம்பரையே பன்முறை சொற்போரில் மடக்கியவர் என்றும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன. ஆத்திசூடி முதலாய நீதி நூல்களை யாத்தவர் இந்த அவ்வையாரே எனக் கொள்ளுகின்றனர். புறநானூற்றுப் புலவரான அவ்வையாரும், விநாயகர் அகவல் இயற்றிய அவ்வையாரும் இவரினும் வேறானவர். புகழேந்தி புகழேந்திப் புலவர் தொண்டைமண்டலத்தில் பிறந்தவர் ; பாண்டியன் அவையை அணிசெய்தவர். இவரைப்பற்றியும் மாறுபாடான வரலாறுகள் வழங்கிவருகின்றன. இவருக்கு அழியாப் புகழை வாங்கித் தந்தது நளவெண்பா என்னும் நூலாகும். அது பயிலுந்தோறும் பயிலுந்தோறும் இன்பம் பயப்பது. வெண்பா என்னும் செய்யுள் வகையானது, புலவர்க்குப் புலி 191. Ep. Rep. 52/80-81 |