பக்கம் எண் :

பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் 387

தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய் மாலிக்காபூர்
படையினருடன் சேர்ந்துகொண்டனர்; வீரபாண்டியன் ஊரைவிட்டே
ஓடிவிட்டான். நகரம் மாலிக்காபூரின் கைக்குள் வீழ்ந்தது. அடைமழை வேறு
பெயத் தொடங்கிற்று. நாடெங்கும் வெள்ளக்காடாக மாறிற்று. மேற்கொண்டு
போர் நடவடிக்கைகளில் ஈடுபட இயலாதவனாய் மாலிக்காபூர் கண்ணனூரை
நோக்கி விரைந்தான். அங்கு வீரபாண்டியன் காணப்பட்டான் என அவனுக்குச்
செய்திகள் எட்டின. வழியில் பொன்னும் மணியும் ஏற்றிக்கொண்டு சென்ற
பாண்டிநாட்டு யானைகள் நூற்றிருபதைக் கைப்பற்றிக் கொண்டான்.
வீரபாண்டியன் காடுகளில் ஒளிந்து ஒளிந்து வெளிப்பட்டான். தன்
கைகளிலிருந்து நழுவி நழுவிச் சென்ற வீரபாண்டியனைத் துரத்திக் கொண்டு
மாலிக்காபூர் சிதம்பரம் வந்தடைந்தான். ஆங்குப் பொன்னம்பலத்தை
அடியுடன் பேர்த்தெடுத்துக் கொண்டு கோயிலுக்கு எரியூட்டினான்; ஊருக்கும்
தீயிட்டான். உடைமைகளைச் சூறையாடினான்; ஆண்களையும், பெண்களையும்,
குழந்தைகளையும் கொன்று குவித்து வெறியாட்டயர்ந்தான். சிதம்பரத்தில்
இருநூற்றைம்பது யானைகளைக் கைப்பற்றினான். கொள்ளையடித்த
பொன்னையும் மணியையும் யானைகளின்மேல் ஏற்றிக் கொண்டான். மீண்டும்
பீர்தூலை நோக்கித் தன் படையைச் செலுத்தினான். ஆங்காங்குத் தன்
கண்ணில்பட்ட கோயில்கள் அத்தனையும் இடித்துத் தரைமட்டமாக்கினான்
(கி.பி. 1311). திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானல்லன். அரங்கநாதர்
கோயிலை இடித்துப் பாழாக்கினான்; உடைமைகளைச் சூறையாடினான்.
அடுத்து மதுரையின்மேல் பாய்ந்தான். அவன் தாக்குதலை முன்னரே யறிந்த
சுந்தர பாண்டியன் மதுரையைக் கைவிட்டு அரண்மனைப் பொக்கிஷத்துடன்
ஓடிவிட்டான். போகும்போது இரண்டு மூன்று யானைகளை மட்டும் விட்டுச்
சென்றான். அதைக் கண்டு பெரிதும் ஏமாற்றமடைந்த மாலிக்காபூர் வெகுண்டு
மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தீயிட்டான். சுந்தர பாண்டியனின் சிற்றப்பனான
விக்கிரம பாண்டியன் பெரும்படையொன்றைத் திரட்டி மாலிக்காபூர்மேல்
ஏவினான். அக் கடுந்தாக்குதலினின்றும் மாலிக்காபூர் தப்பிப் புறமுதுகிட
வேண்டியவனாயினான். அவன் ஏற்கெனவே கைப்பற்றியிருந்த 512 யானைகள்,
5,000 குதிரைகள் ஆகியவற்றுடனும், தங்க அணிகளுடனும் மதுரையை
விட்டுத் தண்டு தூக்கினான் (கி.பி. 1311). மதுரையை விட்டுப் புறப்பட்டு
மின்னல் வேகத்தில் இராமேசுவரம் சென்று அங்கு நகரை அழித்தும்,
மக்களைப் படுகொலை செய்தும், உடைமைகளைக் கொள்ளையடித்தும்
படுசேதம் விளைத்தான். அங்கு மசூதி ஒன்றைக் கட்டினான் என்று