முஸ்லிம் வரலாறுகள் கூறுகின்றன. அங்கிருந்து இலங்கைக்குத் தாண்டிச் சென்று, கோயில் ஒன்றை இடித்து நிரவியதாகப் பெரிஷ்டா என்ற முஸ்லிம் வரலாற்று நூலாசிரியர் தெரிவிக்கின்றார்; ஆனால், மேற்கொண்டு சான்றுகள் அகப்படாதவரையில் உண்மை இன்னதென அறுதியிட்டுக் கூறமுடியாது. பாண்டி நாடு தீப்பற்றி எரிந்தது; கோயில்கள் இடிந்து விழுந்தன; மக்கள் படுகொலைக்குள்ளாயினர். உடைமைகள் பறிபோயின. ஆயினும் பாண்டியர் தளர்ச்சியுறவில்லை. அவர்களையடக்கி அடிமை கொள்ளாமலேயே மாலிக்காபூர் டில்லி நோக்கிப் பயணமானான். பாண்டி நாட்டில் முஸ்லிம்களின் தலையீடும் அவனோடு மறைந்தது. மீண்டும் சுந்தர பாண்டியனும் வீரபாண்டியனும் தொடர்ந்து பாண்டி நாட்டை ஆண்டு வரத் தொடங்கினர். அரசுரிமைப் போராட்டங்களாலும், மாலிக்காபூரின் அட்டூழியங்களாலும் பாண்டி நாடு சீர்குலைந்து போயிற்று. குடிவளமும், படை பலமும் குன்றிவிட்டன. பாண்டி மன்னரின் குடும்பத்தில் ஒற்றுமையும், கட்டுப்பாடும் அழிந்தன. கேரள மன்னனான இரவிவர்மன் குலசேகரன் தன் முன் பழுத்து விழுந்த வாய்ப்பைக் கைநழுவவிட விரும்பவில்லை. அவன் நாடும் மாலிக்காபூரின் படையெடுப்பினின்றும் தப்பித்துக்கொண்டது. அவனுடைய செல்வத்திற்கும், படைபலத்துக்கும் அழிவு நேரவில்லை. ஆகவே, அவன் பாண்டி நாட்டின் மேலும், சோழ நாட்டின் மேலும் படையெடுத்தான். அவ்விரு நாடுகளும் துவண்டு போயிருந்த நிலையில் அவனை எதிர்த்து நிற்கும் திறனிழந்து நின்றன. எனவே, அவனுக்கு அவை அடிபணிந்தன. வேகவதி யாற்றங்கரையில் சோழ பாண்டிய நாடுகளின் பேரரசனாக முடி சூட்டிக்கொண்டான். வேகவதியாறு காஞ்சிபுரத்தைத் தழுவிக் கொண்டு ஓடுகின்றதாகையால் கேரளன் காஞ்சிபுரம் வரையில் படையெடுத்து வந்தான் என்பதில் ஐயமில்லை. வீரபாண்டியன் என்ற வேறொரு மன்னன் குலசேகரனிடம் தோல்வியுண்டு காடுகளில் புகுந்து ஒளிந்துகொண்டான். மதுரையில் அரசாண்டு கொண்டிருந்த வீரபாண்டியன் தன் முயற்சிகளில் சளைக்காதவனாய்ப் போசள மன்னன் மூன்றாம் வீரவல்லாளன், வீர உதயமார்த்தாண்டவர்மன் ஆகியவர்களுடைய துணையை நாடிப் பெற்றுக் கொண்டான். சூழ்நிலை தனக்கு மாறாகத் தோன்றவே இரவிவர்மன் குலசேகரன் வடபாண்டி நாட்டைக் கைவிட்டுத் தென் பகுதிக்குப் பின்னிட்டு இரண்டாண்டுகள் பதுங்கி நின்றான். |