பக்கம் எண் :

பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் 389

     விதியும், சூழ்நிலையும், மண்ணாண்டவரின் மண்ணாசையும்,
சூழ்ச்சிகளும் ஒன்றுகூடிப் பாண்டி நாட்டைப் பற்றி அலைக்கழித்து வந்தன.
இந் நிலையில் எதிர்பாராத ஒரு திசையிலிருந்து பாண்டி நாட்டுக்குத்
தொல்லைகள் உதயமாயின. காகதீய மன்னனான பிரதாபருத்திரன் பாண்டி
நாட்டின்மேல் முப்பிடி நாயகன் தலைமையில் படையொன்றை ஏவினான்.
பாண்டி நாட்டுக்கும் தமக்கும் மாபெரும் அழிவு எதிர்நோக்கி நின்றதை
உணர்ந்தவர்களான வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், விக்கிரம பாண்டியன்,
குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியன் ஆகியவர்கள் ஐவரும்
ஒன்றுபட்டுக் காஞ்சிபுரத்துக்கண்மையில் காகதீயரை எதிர்த்து நின்றனர்.
ஆனால், வெற்றி வாகை காகதீயரின் கழுத்திலேயே விழுந்தது. அவர்கள்
காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினர். வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும்
படுதோல்வியுற்றனர்.

     மண்டி வந்த ஆபத்துகள் விலகிப் போகவே மதுரையில் அரசுரிமைக்
குழப்பமும், கிளர்ச்சிகளும் மீண்டும் தலைதூக்கலாயின. உடன் உரிமை
கொண்டாடிய இளவரசர்கள் ஒருநாட்டை ஒத்து நிருவகித்து வருவதென்பது
இடர்ப்பாடானதொரு வினையாகும். அயலாரின் தொல்லைகளை நாடு
எதிர்த்து நிற்கவேண்டிய நெருக்கடியான ஒரு நிலையில் இருக்க, நாட்டில்
அமைதியை நிலைநாட்டிக் குடிவளத்தைப் பெருக்க வேண்டிய பெரும்
பொறுப்புகள் தமக்கிருக்க, பாண்டிய இளவரசர்கள் அரசுரிமைப் பூசல்களை
விட்டுக்கொடுக்கவில்லை. வீரபாண்டியன் ஒரு புறமும், அவனுடைய மகன்
சமுத்திர பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் இணைந்து ஒரு புறமும்
எதிர்த்து நின்றனர். அவர்களுக்குத் திறை செலுத்தி வந்த குறுநில மன்னர்கள்
‘பற்றி எரியும் வீட்டில் பற்றின வரையில் இலாபம்’ என்று எண்ணித் தமக்குக்
கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொண்டார்கள். இக்
குறுநில மன்னருள் குலசேகரன் என்பவன் ஒருவன்; வடஆர்க்காட்டுப்
பகுதியை ஆண்டு வந்த சம்புவராயர்களின் குடும்பத்தில் வந்தவன்.
சம்புவராயர்கள் சோழர்கட்கும், பிறகு பாண்டியருக்கும் திறைசெலுத்தி
வந்தவர்கள். குலசேகரன் பாண்டி நாட்டின் மேலாதிக்கத்தினின்றும் நழுவிக்
கி.பி. 1317-18-ல் சுதந்தர வேந்தனானான். அவனைத் தொடர்ந்து மூன்றாம்
இராசேந்திரன் மகனான சேமப்பிள்ளை என்பவனும் புதுக்கோட்டைப்
பகுதியில் பாண்டியரின் அதிகாரத்தை உதறித் தள்ளினான்.

     சுந்தரபாண்டியன் தொடர்ந்து கி.பி. 1320 வரையில் அரசாண்டான்.
அதே கால அளவில் இராமநாதபுரம் பகுதியிலிருந்து