பக்கம் எண் :

390தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

வீரபாண்டியனும் கல்வெட்டுச் சாசனங்களைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
டில்லி சுல்தான் கியாசுதின் துக்ளக் தன் மகன் உலூப்கானைப் பாண்டி
நாட்டின்மேல் ஏவினான். பிற்காலத்தில் முகமது பின் துக்ளக் என்ற பேரில்
டில்லி சுல்தானாக அரியணை ஏறிய மன்னன் இவனேயாவான். உலூப்கான்
மதுரையைக் கைப்பற்றி (கி.பி. 1323) அதை டில்லி அரசின் மாகாணங்களுள்
ஒன்றாக இணைத்துக் கொண்டான். முஸ்லிம் வரலாறுகளில் மதுரைக்கு மாபார்
என்று பெயர் வழங்குகின்றது. பாண்டியரின் ஆட்சி மறையவில்லை.
அவர்களுடைய ஆட்சி மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய
இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சுந்தரபாண்டியனின் தம்பியான
மாறவர்மன் குலசேகரன் கி.பி. 1346 வரையில் ஆட்சி புரிந்து வந்தான்.
அவனையன்றி வேறு சில பாண்டியரும் கல்வெட்டுச் சாசனங்கள் பிறப்பித்து
வந்துள்ளனர். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன், சடையவர்மன் பராக்கிரம
பாண்டியன் ஆகியவர்கள் பாண்டிநாட்டின் தனித்தனிப் பகுதிகளை ஆண்டு
வந்தார்கள். அவர்களும், போசள மன்னன் மூன்றாம் வீரவல்லாளனும்
மதுரையில் நடைபெற்றுவந்த முஸ்லிம் ஆட்சியை ஒழிக்க முயன்றனர்;
எனினும் வெற்றி கண்டார் அல்லர். பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில்
விசய நகரப் பேரரசின்கீழ் மதுரையானது முஸ்லிம் ஆதிக்கத்தினின்றும்
விடுதலை பெற்ற பிறகும் சில பாண்டியர்கள் திருநெல்வேலிப் பகுதியில் கி.பி.
1411 வரையில் அரசாண்டு வந்தனர்.

     மூன்றாம் வீரவல்லாளன் தன்னுடைய தனிப்பட்ட முயற்சி
பலனளிக்காமற் போகவே, வடஆர்க்காட்டுப் பகுதியில் அரசு புரிந்துவந்த
சம்புவராயர்களைப் பாண்டி நாட்டின் வடபகுதியின் ஆட்சியில் அமர்த்தக்
கடும் ஏற்பாடுகள் செய்து வந்தான். இக் காரணத்தால் அவனுக்கும் மதுரையில்
அரசாண்டு வந்த சுல்தான்களுக்குமிடையே அடிக்கடி பூசல்களும் போர்களும்
நேர்ந்தன. அதனால் அவனுடைய ஆட்சிக்கு ஊனம் ஏற்பட்டு நாளடைவில்
அவனுடைய படைபலமும் குன்றி வரலாயிற்று. இறுதியாக, விசயநகரப் பேரரசு
போசள நாட்டை விழுங்கும் தாழ்நிலையும் வந்தெய்திற்று.

மதுரையில் சுல்தான் ஆட்சி

     மதுரையில் ஜலாலுதீன் ஹசன்ஷா என்பவன் ஐந்தாண்டுகள் ஆட்சி
புரிந்தான். அவன் கி.பி. 1340-ல் கொலையுண்டு மாண்டான். அவனுக்குப் பின்
அவனுடைய அமீர்களுள் ஒருவனான அலாவுதீன் உதாஜி என்பவன்
மதுரையின் சுல்தானானான்.