பக்கம் எண் :

401

                   16. மதுரை நாயக்கர்கள்

     விசயநகரப் பேரரசானது தலைக்கோட்டைப் போரில் (1565)
வீழ்ச்சியுற்றுச் சிதறுண்டு போயிற்று. விசயநகரத்துத் திருவும் கலைச்
செல்வங்களும் சீரழிந்துவிட்டன. விசயநகரப் பேரரசன் இராமராயன் போரில்
வீரமரணத்தைத் தழுவினான். ஆனால், விசயநகர அரசு மட்டும் மறையாமல்
தொடர்ந்து நடைபெற்று வந்தது. இராமராயனின் தம்பி முதலாம்
திருமலைராயன் (கி. பி. 1570-2) நகரத்துக்குப் புத்துயிரூட்ட முயன்றான்;
ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. விசயநகரத்தை விட்டுப்
பெனுகொண்டாவைத் தன் தலைநகரமாக்கிக் கொண்டான். அவ்வூரில் தங்கிப்
படைகளைச் சீரமைக்கத் தொடங்கினான். உள்நாட்டுக் கிளர்ச்சிக்காரருடனும்,
கொள்ளைக் கூட்டத்தாருடனும், பாளையக்காரருடனும் அவன் ஆறாண்டுகள்
போராட வேண்டியவனானான். அவனுடைய அவலநிலையைப் பயன்படுத்திக்
கொண்டு மதுரை, தஞ்சாவூர், செஞ்சி முதலிய இடங்களில் பாளையங்கள்
அமைத்து ஆண்டுவந்த நாயக்கர்கள், விசயநகரப் பேரரசின் மேலாதிக்கத்தை
உதறித் தள்ளிவிட்டுத் தாமே சுதந்தர மன்னர்களாக அரசாங்கம்
நடத்தலானார்கள்.

     பேரரசன் திருமலைராயன் தன் மூத்த மகன் சீரங்கனைத் தெலுங்கு
நாட்டு ஆட்சியிலும், இரண்டாம் மகன் இராமனைக் கன்னட நாட்டு
ஆட்சியிலும், இளைய மகன் வேங்கடாத்திரியைத் தமிழகத்து ஆட்சியிலும்
அமர்த்தினான். திருமலைக்குப் பிறகு அவன் மூத்த மகன் சீரங்கன்
விசயநகரத்துப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான் (1572). விசயநகரப்
பேரரசின் துளுவப் பரம்பரை மன்னனான சதாசிவராயன் (1542-76) சிறையில்
அடைபட்டு மாண்டுபோனான்; சீரங்கன் மக்கட்பேறின்றி 1585-ல்
உயிர்நீத்தான். அவனையடுத்து அவன் தம்பி வேங்கடனே பட்டத்துக்கு
வந்தான். அவன் இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடைய
ஆட்சியிலும் அரசுரிமைக் கிளர்ச்சிகள் ஓய்ந்தபாடில்லை. அவன்
ஆதிக்கத்தை எதிர்த்துப் பல குறுநிலத் தலைவர்கள் கிளர்ச்சி செய்தனர்.
வேலூரில் லிங்கம நாயக்கன் கலகத்தில் இறங்கினான். அவனுடைய