பக்கம் எண் :

400தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     தென்பாண்டி நாட்டில் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல்
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் சில பாண்டிய அரசர்களும்
ஆண்டு வந்தனர். அவர்களுடைய வரலாறுகளைப் பற்றிய செய்திகள்
விளக்கமாக இல்லை. அவர்கள் எந்த ஊரிலிருந்து அரசாண்டனர் என்றும்
தெரியவில்லை. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஒரு நூறு
ஆண்டுகளுக்குள் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய மன்னர்களும்,
சடையவர்மன் குலசேகர பாண்டியன், சடையவர்மன் விக்கிரம பாண்டியன்
என்ற பெயர்களுடைய மன்னர் இருவரும் ஆண்டு வந்தனர் எனக்
கல்வெட்டுச் செய்திகளினால் அறிகின்றோம்.

     சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1422-63) என்பவன் பிற்காலப்
பாண்டியருள் சிறப்பிடம் பெற்றுள்ளான். இம் மன்னன் அரசியல் அறிவும்,
போர்த் திறனும் வாய்ந்தவன்; தமிழ்ப் புலமையும், வடமொழிப் பயிற்சியும்
வாய்க்கப் பெற்றிருந்தான். திருக்குற்றாலத்தில் நடைபெற்ற போர் ஒன்றில்
சேர மன்னன் இப் பாண்டியனிடம் தோற்றுப் புறமுதுகிட்டான்.5
சடையவர்மன் தென்காசிக் கோயிலை எழுப்பினான். கோயில் கட்டி
முடிப்பதற்குப் பதினேழாண்டுகள் பிடித்தன. இவன் விசுவநாதப் பேரேரி
என்றோர் ஏரியைக் கட்டி உழவுக்கு ஏற்றமளித்தான்.

     அடுத்து அரியணை ஏறியவன் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
(1463-73). இவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனுடைய தம்பியாவான்;
இவன் மகன் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியனை (1473-1506)
அடுத்து மணிமுடி சூட்டிக் கொண்டான். சடையவர்மன் சீவல்லப பாண்டியன்
என்பவன் ஒருவன் (1534-43) அரசாண்டு வந்துள்ளான். இவன் ஆகவராமன்
என்பவனின் மகன். இவன்மேல் சேர மன்னன் உதயமார்த்தாண்டன் போர்
தொடுத்துப் பாண்டி நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான்.
சீவல்லப பாண்டியன் விசயநகரப் பேரரசனான அச்சுத தேவராயனிடம்
படைத்துணையை நாடினான். அச்சுதனின் படைகள் உதயமார்த்தண்டனைத்
தாக்கிப் பாண்டி நாட்டுப் பகுதிகளை அவனிடமிருந்து கைப்பற்றி மீண்டும்
சீவல்லபனிடம் அளித்தன. நன்றி மறவாத சீவல்லபன் தன் மகளை அச்சுத
தேவராயனுக்கு மணஞ் செய்து கொடுத்தான்.

     5. T.A.S. I.p. 126-33.
     6. T.A.S. I. p. 99-100.