பக்கம் எண் :

பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் 399

பாண்டியரின் கல்வெட்டுகளில் இவர்களுடைய பெயர்கள் காணப்படவில்லை.
பதினாறாம் நூற்றாண்டில் அரசுரிமை கொண்டிருந்த பாண்டிய மன்னன்
ஒருவனேனும் மதுரையில் ஆளவில்லை எனத் தெரிகின்றது.

     பாண்டி நாட்டு அரியணைக்கு உண்மையாக உரிமை
கொண்டாடியவர்கள் தென்காசியில் ஒதுங்கி நின்றார்கள். இவர்களுக்குத்
தொலையாத எதிர்ப்புக் கொடுத்து வந்த பல குறுநில மன்னரை அரியநாத
தளவாய் ஒடுக்கிவிட்டார். அவர்கள் அனைவரும் தளவாயுடன் சிறிது காலம்
போரிட்டுச் சளைத்துப் போய், இறுதியில் மதுரை நாயக்கரின்கீழ்ப்
பாளையக்காரர்களாக இழிவுற்றுத் திறைசெலுத்தி வரவும் உடன்பட்டனர்.
வேணாட்டு மன்னன் திருவடி என்பவன் விசயநகரப் பேரரசர் விசுவநாத
நாயக்கன் அவனையும் தன் படைபலத்தால் வென்று அடக்கிவிட்டான்.
தென்காசிப் பாண்டியரும் மதுரை நாயக்கரின் மேலாதிக்கத்துக்குத்
தலைவணங்கினர். விசயநகரப் பேரரசன் அச்சுதராயன் பாண்டி நாட்டு
இளவரசி ஒருத்தியை மணந்தான். அச்சுதராயனுடைய படைத்துணையுடன்
விசுவநாத நாயக்கன் திருநெல்வேலிச் சீமையை மதுரைச் சீமையுடன்
இணைத்துக் கொண்டான். அரியநாதருடைய உதவியைக் கொண்டு
திருநெல்வேலிச் சீமையில் பல சீர்திருத்தங்களை விசுவநாத நாயக்கன்
செய்தான். உழவுத்தொழிலைத் தூண்டிவிட்டான். நாடு முழுவதிலும் பல பாசன
வசதிகளை அமைத்துக் கொடுத்தான். சீர்குலைந்து கிடந்த அரசாங்கத்தை
நிலைப்படுத்தி, நீதியையும் நிருவாகத்தையும், மக்கள் நலனுக்கு ஏற்ப
ஒழுங்குபடுத்தினான். நாடு முழுவதிலும் அமைதி குடி கொண்டது.
திருநெல்வேலி நகரம் விரிவடைந்தது. அங்குப் புதிய கோயில்கள் எழுந்தன.
பழைய கோயில்கள் பழுது பார்க்கப்பட்டன. தெருக்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டன. மக்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டன.

     விசுவநாத நாயக்கனின் ஆட்சியில் மதுரை தேசத்தின் எல்லையானது
விரிவடைந்தது. இக் காலத்திய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி,
திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர், சேலம், திருவிதாங்கூரின் ஒரு பகுதி
ஆகியவை மதுரைச் சீமையின் எல்லைக்குள் அடங்கியிருந்தன. விசுவநாத
நாயக்கனின் செங்கோன்மையின்கீழ்த் தென்காசிச் சீமையில் அரசாண்டு வந்த
பாண்டிய மன்னரின் ஆக்கமும், ஆட்சிப் பொறுப்புகளும் வளர்ச்சியுற்றன.